ஐக்கிய அரபு நாடுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் புதிய சாதனையும் படைத்தது.
அதோடு நிற்காத அந்த அணி 2வது போட்டியிலும் 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு புதிய சாதனை படைத்தது. அந்த நிலையில் அத்தொடரின் 3வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது.
ஆறுதல் வெற்றி:
அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரஹ்மனுதுல்லா குர்பாஸ் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் எதிர்புறம் அப்துல் மாலிக் 9, ரஹ்மத் ஷா 1, கேப்டன் ஷாஹிதி 10, ஓமர்சாய் 2, முகமது நானி 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
இருப்பினும் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய குர்பாஸ் அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 89 (94) ரன்களில் அவுட்டானார். இறுதியில் 34 ஓவர்களிலேயே ஆப்கானிஸ்தானை 169 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ஆண்டிலோ பெலுக்வியோ, நக்பா பீட்டர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சாதனை வெற்றி:
அதைத்தொடர்ந்து 170 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 26, டோனி டீ ஜோர்சி 22, ரீசா ஹெனிக்ஸ் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 80-3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி ஐடன் மார்க்கம் அரை சதமடித்து 69* (67) ரன்கள் குவித்தார். அவருடன் திரிஸ்ஷன் ஸ்டப்ஸ் 26* ரன்கள் எடுத்ததால் 33 ஓவரிலேயே 170-3 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: கவாஸ்கரின் 51 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. டான் ப்ராட்மேன் பட்டியலில் ஆசிய வீரராக சாதனை
அதனால் அவமானத் தோல்விக்கு பின் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்த தென்னாபிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆப்கானிஸ்தான் 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடரை வென்று சாதனை படைத்தது. அத்துடன் தங்களுடைய கேரியரில் ஐசிசி தரவரிசையில் டாப் 5 இடங்களில் உள்ள அணிக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.



