கவாஸ்கரின் 51 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. டான் ப்ராட்மேன் பட்டியலில் ஆசிய வீரராக சாதனை

Jaiswal
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. அத்துடன் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேச அணியை செயலில் வீழ்த்திய இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அங்கே தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கவாஸ்கரை முந்திய ஜெய்ஸ்வால்:

அதன் பின் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனையே வெளுத்து வாங்கிய அவர் 712 ரன்கள் குவித்தார். அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவிய ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதை வென்றார். அந்த சூழ்நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் 56, 10 என மொத்தம் 66 ரன்கள் குவித்தார்.

இந்த 66 ரன்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1094 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் 51 வருட சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1973ஆம் ஆண்டு அறிமுகமான கவாஸ்கர் தனது முதல் 10 போட்டிகளில் 978 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

மாஸ் பட்டியல்:

இது போக ஒட்டு மொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 10 போட்டிகளில் அதிக ரன்கள் வீரர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் 4வது இடத்தை பிடித்துள்ளார். அந்த சாதனை பட்டியல்:
1. டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா): 1446
2. சர் எவரட்டன் வீக்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்): 1125
3. ஜார்ஜ் ஹெட்லி (வெஸ்ட் இண்டீஸ்): 1102
4. யசஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா): 1094
5. மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா): 1088

இதையும் படிங்க: அவரை கடவுள் தான் அனுப்பிருக்காரு.. அவரால மத்தவங்களுக்கு ஈஸியா சான்ஸ் கிடைக்காது.. அஸ்வின் பாராட்டு

ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன் இப்போதும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இந்த பட்டியலில் ஆசிய கண்டத்திலிருந்து ஜெய்ஸ்வால் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் 21 வயதிலேயே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement