பஞ்சாப் நிர்ணயித்த பெரிய இலக்கினை ஊதித்தள்ளிய ராஜஸ்தான் – முழுபோட்டியில் நடந்தது என்ன?

PBKS vs RR Arshdeep Singh Jaiswal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 7-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜானி பேர்ஸ்டோவுடன் 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷிகர் தவான் 12 (16) ரன்களில் அவுட்டானார்.

Johnny Bairstow

- Advertisement -

அடுத்து களமிறங்கிய பனுக்கா ராஜபக்சா 2 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 27 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மயங்க் அகர்வால் 15 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 8 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

அதனால் 119/4 என தடுமாறிய பஞ்சாப்பை கடைசி நேரத்தில் தூக்கி நிறுத்த முயன்ற லிவிங்ஸ்டன் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (14) ரன்களில் ஆட்டமிழந்தாலும் அவருடன் ஜோடியாக பேட்டிங் செய்த இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 38* (18) ரன்கள் எடுத்து அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 189/5 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக யுஸ்வென்ற சஹால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அசத்தல் ஜெய்ஸ்வால்:
அதை தொடர்ந்து 190 என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு நீண்ட நாட்களாக பெஞ்சில் அமர்ந்திருந்த யஸஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கி 46 ரன்கள் நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் ஜோஸ் பட்லர் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 பவுண்டரியுடன் 23 (12) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

buttler

ஆனாலும் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பில் அற்புதமாக பேட்டிங் செய்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (41) ரன்கள் எடுத்து ராஜஸ்தானை முன்னிலைப்படுத்தி 15-வது ஓவரில் அவுட்டானார். அப்போது வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டபோது 3 பவுண்டரியுடன் 31 (32) ரன்களை எடுத்து சமாளித்துக் கொண்டிருந்த தேவ்தூத் படிக்கள் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

சேஸ் செய்த ராஜஸ்தான்:
ஆனால் மறுபுறம் சம்சான் அவுட்டான பின் களமிறங்கி அதிரடி காட்டிய சிம்ரோன் ஹெட்மையர் மிரட்டலாக பவுண்டரிகளை பறக்க விட்டார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அவர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31* (16) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 190/4 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 190 என்ற பெரிய இலக்கை எட்டிப் பிடிக்க ராஜஸ்தான் சிரமப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த அணிக்கு களமிறங்கிய அனைவருமே 30க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்ததால் இறுதியில் சேசிங் எளிதாக மாறியது.

Shimron Hetmayer

குறிப்பாக பட்லர், சாம்சன் போன்ற வீரர்கள் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும் நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த வாய்ப்பில் காளையாக சீறி பாய்ந்த ஜெய்ஸ்வால் 15 ஓவர் வரை நின்று பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து வெற்றியை உறுதி செய்தார். அதை சிந்தாமல் சிதறாமல் இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் அபார பினிஷிங் கொடுத்து தன்னை ராஜஸ்தானின் பினிஷெர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து ப்ளே ஆப் வாய்ப்பை 90% உறுதி செய்துவிட்டது.

மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்கள் எடுத்த பஞ்சாப் பந்துவீச்சில் சுமாராக செயல்பட்டது. குறிப்பாக அந்த அணியின் இளம் இந்திய வீரர் அர்ஷிதீப் சிங் மட்டும் 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு தனி ஒருவனாக போராடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய ரபாடா போன்ற முக்கிய பவுலர் 50 ரன்களை வாரி வழங்கியதால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் 7-வது இடத்திற்கு பின்தங்கியதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் குறைத்துக் கொண்டது.

Advertisement