148 ரன்ஸ்.. கோலியின் போராட்டத்தை வீணடித்த ஆர்சிபி.. ராஜஸ்தானுக்காக சதமடித்த ஜோஸ் பட்லர் அரிதான சாதனை

RR vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தில் இளஞ்சிவப்பு ஜெர்சியில் களமிறங்கிய ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் – விராட் கோலி ஆகியோர் நிதானம் கலந்த அதிரிடியை வெளிப்படுத்தினர். பவர்பிளே முழுவதும் கடந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் சற்று வேகமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் ஆளாக அரை சதமடித்தார். மறுபுறம் 13 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 125 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் தடுமாற்றமாகவே விளையாடி 44 (33) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் வெற்றி:
அப்போது வந்த மேக்ஸ்வெல் 1, சௌரவ் சௌஹான் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தன்னுடைய 8வது சதத்தை அடித்து 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* (72) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 183/3 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 184 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அதில் சுமாரான ஃபார்மில் தவிக்கும் ஜோஸ் பட்டர் இப்போட்டியில் பெங்களூரு பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் பவர்பிளே முடிந்து மிடில் ஓவர்கள் வரை அபாரமாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது. அப்போது கேப்டன் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 69 (42) ரன்ளில் அவுட்டாக அடுத்ததாக வந்த ரியான் பராக் 4, துருவ் ஜுரேல் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது வந்த ஹெட்மயர் 11* (6) ரன்கள் அடித்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய பட்லர் 1 ரன் தேவைப்பட்ட போது அட்டகாசமான சிக்ஸருடன் சதமடித்து 100 ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் மற்றும் கேஎல் ராகுலுக்குப்பின் இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த 2 தோல்விகள்.. தற்போதைக்கு சி.எஸ்.கே அணி புள்ளிபட்டியலில் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா? – விவரம் இதோ

அதனால் 19.1 ஓவரிலேயே 189/4 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 6 வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகளில் நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் ரீஸ் டாப்லி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்க தவறிய பெங்களூரு 4வது தோல்வியை பதிவு செய்து பரிதாபத்தை சந்தித்தது.

Advertisement