147 ரன்ஸ் சேசிங்கில் பஞ்சாப்பிடம் திணறிய ராஜஸ்தான்.. சஞ்சு சாம்சனின் தவறை ஹெட்மயர் சரிசெய்தது எப்படி?

RR vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்கிய 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு அதர்வா டைட் ஆரம்பத்திலேயே 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த பிரப்சிம்ரன் சிங் தடுமாற்றமாக விளையாடி 10 (14) ரன்களில் சஹால் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதே போல மறுபுறம் திணறிய மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவை 15 (19) ரன்களில் அவுட்டாக்கிய கேசவ் மகாராஜ் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் சாம் கரணை 6 (10) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதிரடி முடிவு:
அதனால் 52/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பஞ்சாப்புக்கு கடந்த போட்டிகளில் ஹீரோவாக செயல்பட்ட சசாங் சிங் 9 (9) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது அதிரடியாக விளையாட முயற்சித்த துணை கேப்டன் ஜித்தேஷ் சர்மாவும் 29 ரன்களில் அவுட்டாகி பஞ்சாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் லியம் லிவிங்ஸ்டன் 21 (14) அசுடோஸ் சர்மா 31 (16) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய பஞ்சாப் 20 ஓவரில் 147/8 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 148 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வாலுடன் காயமடைந்த பட்லருக்கு பதிலாக அறிமுக வீரர் டானுஷ் கோடியான் இறங்கினார். ஆனால் ரஞ்சிக்கோப்பையில் 10, 11வது இடத்தில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் இப்போட்டியில் அதிரடியாக செயல்பட முடியாமல் 24 (31) ரன்கள் குவித்து தடுமாறி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் அவருடன் 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வாலை 39 (28) ரன்கள் குவித்த போது அவுட்டாக்கிய ரபாடா அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனையும் 18 (14) ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அதற்கடுத்ததாக வந்த ரியன் பராக் 23 (18) துருவ் ஜுரேல் 6 (11) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதே போல கடைசி நேரத்தில் ரோவ்மன் போவல் அதிரடியாக 11 (5) ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மறுபுறம் சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக போராடியதால் ராஜஸ்தானுக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷிதீப் சிங் வீசிய அந்த ஓவரில் 6, 2, 6 என 2 சிக்சர்களை பறக்க விட்ட ஹெட்மயர் 27* (10) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.5 ஓவரில் 157/7 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: துபேவை எடுப்பது உங்க இஷ்டம்.. ஆனா 2024 டி20 உ.கோ ஜெயிக்க இந்தியா அதை செய்யனும்.. பிளெமிங் அட்வைஸ்

அதனால் சுனில் நரேன் போல டானுஷ் கோடியானை ஓப்பனிங்கில் களமிறக்கிய சஞ்சு சாம்சனின் வித்தியாசமான முடிவு தோல்வி மற்றும் விமர்சனங்களை சந்திப்பதிலிருந்து தப்பியது. மறுபுறம் பேட்டிங்கில் தடுமாறிய பஞ்சாப் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக கேப்டன் ஷாம் கரன் ரபாடா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement