- Advertisement -
ஐ.பி.எல்

15.5 ஓவரில் 212 ரன்ஸ்.. குஜராத்தை சூறையாடிய 14 வயது சூர்யவன்சி உலக சாதனை.. ராஜஸ்தான் சரித்திர வெற்றி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் 47வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் குஜராத்துக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 209-4 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 39, கேப்டன் கில் 84, ஜோஸ் பட்லர் 50* ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக 14 வயது இளம் வீரர் சூரியவன்சி குஜராத் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 17 பந்தில் அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

சூறையாடிய சூர்யவன்சி:

தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் கரீம் ஜானத் வீசிய பத்தாவது ஓவரில் 6, 4, 6, 4, 4, 6 என 30 ரன்கள் தெறிக்க விட்டு சதத்தை நெருங்கினார். நேரம் செல்ல செல்ல பட்டாசாக விளையாடிய அவர் குஜராத்தை சூறையாடி வெறும் 35 பந்தில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை சூரியவன்சி படைத்தார்.

14 வருடம் 32 நாட்கள் வயதில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் மகாராஷ்டிரா அணியின் விஜய் ஜோல் 18 வருடம் 118 நாட்களில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து அசத்திய அவர் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 101 (38) ரன்னில் அவுட்டாகி பாராட்டுக்கு மத்தியில் வெளியேறினார்.

- Advertisement -

ராஜஸ்தான் சரித்திர சேசிங்:

அடுத்து வந்த நிதீஷ் ராணா 4 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு குஜராத்தை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து 70* (40) ரன்கள் அடித்தார். அவருடன் கேப்டன் ரியான் பராக் 32* (15) ரன்கள் எடுத்ததால் 15.5 ஓவரிலேயே 212/2 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 200க்கும் மேற்பட்ட இலக்கை குறைந்த ஓவரில் வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன் 2024ஆம் ஆண்டு இதே குஜராத்துக்கு எதிராக பெங்களூரு 16 ஓவரில் 200+ இலக்கை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. இந்த சரித்திர வெற்றியால் 3வது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -