9க்கு 9 வெற்றிகள்.. டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான்.. ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான நிகழ்வு

RR vs DC
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 15 ரன்கள் ஆட்டமிழந்ததால் என ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் நிதானமாக விளையாடினார். அவருடன் ஆச்சரியப்படும் வகையில் ஐந்தாவதாக களமிறங்கி 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 29 (19) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

9க்கு 9 வெற்றிகள்:
அதே போல எதிர்ப்புறம் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரியான் பராக் அரை சதமடித்து அசத்தினார். அப்போது வந்த துருவ் ஜுரேல் 20 (12) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக பேட்டிங் செய்த ரியன் பராக் 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிராக 25 ரன்கள் அடித்து மொத்தம் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84* (45) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் சிம்ரோன் ஹெட்மயர் 14* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ராஜஸ்தான் 185/5 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், குல்தீப், அக்சர், நோர்ட்ஜே, முகேஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 186 ரன்களை துரத்திய டெல்லிக்கு மிட்சேல் மார்ஷை 23 (12) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய நன்ரே பர்கர் அடுத்து வந்த ரிக்கி புய்யை டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் 30/2 என தடுமாறிய டெல்லிக்கு துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடினார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் வார்னர் 49 (34) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரில் ரிஷப் பண்ட் தடுமாறி 28 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த அபிஷேக் போரேல் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் கடைசி நேரத்தில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி போராடியதால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி 20 ஓவரில் 173/5 ரன்கள் எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால், நன்ரே பர்கர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: அதுல தடுமாறி மண்டையில் அடி வாங்குன காலம் மலையேறிடுச்சு.. இந்தியா அசராது.. ஆஸிக்கு அஸ்வின் சவால்

அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் 2 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இதையும் சேர்த்து இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே 9 வெற்றிகளை பெற்ற அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் கடைசியாக 2019 சீசனில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement