ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ம் தேதி கௌகாத்தி நகரில் இரவு 7.30 மணிக்கு 11வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு கலீல் அகமது வேகத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த நிதீஷ் ராணா அதிரடியாக வெளுத்து வாங்கினார்.
அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப்பக்கம் 21 பந்துகளில் அரை சதத்தை அடித்து சென்னை பவுலர்களை புரட்டி எடுத்த நித்திஷ் ராணா 81 (36) ரன்கள் விளாசி அஸ்வின் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 3, ஹஸரங்கா 4 ரன்னில் நூர் அஹ்மத், ஜடேஜா சுழலில் சிக்கினார்.
ராஜஸ்தான் அசத்தல்:
அதே போல மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் ரியான் பராக் 37 (28) ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் ஹெட்மயர் 19 (16) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ராஜஸ்தான் 182-9 ரன்கள் எடுத்தது. மறுபுறம் ராணா விளையாடிய வேகத்திற்கு 200 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானை ஓரளவு மடக்கிய சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா, நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு ஜோப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரிலேயே மிரட்டலான வேகத்தில் வீசி ரச்சின் ரவீந்திராவை டக் அவுட்டாக்கி மெய்டன் போட்டார். அதனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய ராகுல் திரிபாதி பின்னர் அதிரடியாக விளையாடி 23 (19) ரன்கள் எடுத்த போது ஹஸரங்கா சுழலில் அவுட்டானார். அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (10) ரன்னில் அவரிடமே விக்கெட்டை இழந்தார்.
சுமாரான சென்னை:
அதே சமயம் கேப்டன் ருதுராஜ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த விஜய் சங்கர் 9 (6) ரன்னில் ஹசரங்காவிடம் போல்டாகி அழுத்தத்தை கொடுத்தார். அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் அரை சதம் கடந்த ருதுராஜ் ரன்னில் முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக வந்த தோனி வெற்றிக்கு போராடியதால் கடைசி ஓவரில் சென்னைக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி சந்தீப் சர்மா வேகத்தில் 16 (11) ரன்னில் ஹெட்மயர் அபார கேட்ச்சில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜடேஜா 33* (22) ஜேமி ஓவெர்ட்டன் 11* (4) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 176-6 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை 6 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: 182 ரன்ஸ்.. ராஜஸ்தானை கட்டுப்படுத்திய சிஎஸ்கே.. தோனிக்கு ஸ்பெஷல் பரிசை வழங்கி கௌரவித்த பிசிசிஐ
பொதுவாகவே சென்னை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கும். ஆனால் இம்முறை ருதுராஜ் தவிர்த்து ராகுல் திரிபாதி, சிவம் துபே, விஜய் சங்கர் போன்ற மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கத் தவறியதால் சேசிங் செய்ய முடியாமல் சென்னை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. மொத்தத்தில் 2019க்குப்பின் 180+ இலக்கை சேசிங் செய்த 9வது போட்டியில் சென்னை ஒன்பதாவது தோல்வியை சந்தித்துள்ளது. மறுபுறம் தங்களது முதல் வெற்றியைப் பெற்ற ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.



