ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கௌஹாத்திகள் 11வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்னில் கலீல் அஹ்மத் வேகத்தில் அவுட்டாகி சென்றார்.
ஆனால் அடுத்ததாக வந்த நித்திஷ் ராணா பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கினார். தொடர்ந்து அதே வேகத்தில் அசத்திய அவர் 21 பந்துகளில் அரை சதத்தை அடித்து மிரட்டினார். அவருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் 20 (16) ரன்கள் எடுத்த போது நூர் அஹ்மத் சுழலில் அவுட்டானார்.
சென்னை அசத்தல் கம்பேக்:
மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய நித்திஷ் ராணா 10 பௌண்டரி 5 சிக்ஸருடன் 81 ரன்களை 225 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் ரியான் பராக் நிதானம் கலந்த அதிரடியைக் காட்டினார். ஆனால் எதிர்ப்புறம் துருவ் ஜுரேல் 3, ஹஸரங்கா 4 ரன்னில் நூர், ஜடேஜா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அதிரடி காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ரியான் பராக் 37 (28) ரன்னில் பதிரனா வேகத்தில் போல்ட்டானார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் 19 (16) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ராஜஸ்தான் 182-9 ரன்கள் எடுத்தது. நித்தீஷ் ரானா விளையாடிய வேகத்தில் 200 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானை டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்து சென்னை கட்டுப்படுத்தியது.
தோனிக்கு கௌரவம்:
அதிகபட்சமாக கலீல் அஹ்மத் 2, நூர் அஹ்மத் 2, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பிசிசிஐ ஸ்பெஷல் நினைவுப் பரிசு வழங்கியது. அதாவது 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தற்போது 18வது வருடத்தில் காலடி வைத்து உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் தொடராக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இதை மட்டும் பண்ணா போதும்.. சன் ரைசர்ஸை பொட்டளம் பண்ணிடலாம் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி
அந்தத் தொடரில் 18 வருடங்களும் தோனி சென்னை, புனே ஆகிய அணிகளுக்காக விளையாடி நிறைய சாதனைகளையும் 5 கோப்பைகளையும் வென்றுள்ளார். அந்த வகையில் 18 வருடங்களாக விளையாடி ஐபிஎல் தொடருக்கு பெருமை சேர்த்து வரும் தோனிக்கு ஸ்பெஷல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதை பிசிசிஐ செயலாளர் தேவஜீத் சைக்கியா வழங்கி தோனியை கௌரவித்தார்.



