ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 62வது போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு மீண்டும் டேவோன் கான்வே 10, உர்வில் படேல் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே 43 (20) ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் மிடில் ஆடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 13, ரவீந்திர ஜடேஜா 1 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அப்போது வந்த இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடிய 42 (25) ரன்கள் குவித்து திருப்பு முனையை உண்டாக்கி பெவிலியன் திரும்பினார்.
சிஎஸ்கே சொதப்பல்:
ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். எதிர்புறம் முடிந்தளவுக்கு அதிரடி காட்ட முயற்சித்த சிவம் துபே 39 (32) ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில் தோனி 16 (17) ரன்கள் அடித்து அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறியதால் 20 ஓவரில் சிஎஸ்கே 187/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3, யுவ்திர் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானுக்கு அடித்து நொறுக்க முயற்சித்த ஜெய்ஸ்வால் 36 (19) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். மறுபுறம் 14 வயது இளம் வீரர் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் முக்கியமான 41 (31) ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
மோசமான சாதனை:
அதே ஓவரில் மறுபுறம் அரை சதமடித்து ராஜஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த சூரியவன்சி 57 (33) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ரியான் பராக் 3 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 31* (12), ஹெட்மயர் 12* (5) ரன்கள் அடித்து இந்த சீசனில் முதல் முறையாக வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்தனர்.
அதனால் 17.1 ஓவரிலேயே 188/4 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையும் சேர்த்து 14 போட்டிகளில் ராஜஸ்தான் 4வது ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை நிறைவு செய்தது. மறுபுறம் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் சிஎஸ்கே தங்களுடைய 10வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: அதுக்கான வேலையை இப்போவே ஆரம்பிச்சாச்சு.. மாஸ் கம்பேக் குடுப்பது பற்றி – தல தோனி பேட்டி
இதையும் சேர்த்து இந்த வருடம் இலக்கைக் கட்டுப்படுத்திய 5 போட்டிகளிலும் சிஎஸ்கே 5 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் வரலாற்றில் 2வது முறையாக ஒரு ஐபிஎல் தொடரில் 10 தோல்விகளைப் பதிவு செய்து சிஎஸ்கே மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022 சீசனிலும் சென்னை 10 தோல்விகளை சந்தித்தது.



