சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்து தொடர்ச்சியாக 13-வது ஆண்டாக ஐபிஎல் சீசனின் துவக்க முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மோசமான சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா :
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 4 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையையும் சமன் செய்துள்ளார்.
அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக முறை டக் அவுட்டான வீரர்களாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 18 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்று அவர்களது சாதனையை ரோகித் சர்மாவும் சமன் செய்தார். நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் இதுவரை ஐபிஎல் தொடரில் 18 முறை டக் அவுட்டாகி அவர்களது சாதனையை சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனிக்கு அடுத்து இரண்டாவது இடத்தினை பிடித்துள்ள ரோகித் சர்மா இப்படி ஒரு மோசமான சாதனையை சமன் செய்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்காக அறிமுகமான ரோகித் சர்மா தற்போது வரை 258 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 43 அரைசதங்களுடன் 6628 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 13 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. மும்பை அணியை வாட்டி வதைக்கும் முதல் போட்டி – விவரம் இதோ
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த வேளையில் நேற்று தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அப்படி விளையாடிய முதல் போட்டியிலேயே அவர் டக் அவுட்டும் ஆகியுள்ளார்.



