
இந்திய அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் பங்கேற்ற 20 அணிகளை விட சிறப்பாக விளையாடிய இந்தியா ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.
அத்துடன் கடந்த 10 வருடங்களாக அனைத்து விதமான ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் உடைத்த இந்தியா வரலாறு படைத்தது. இந்த வெற்றியால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர். முன்னதாக ஃபைனல் நடைபெற்ற பார்படாஸ் நகரில் போட்டி முடிந்ததும் அதிகப்படியான மழை புயல் ஏற்பட்டதால் இந்திய அணியினர் இன்னும் நாடு திரும்பவில்லை.
ரோஹித் அழைப்பு:
ஆனால் தற்போது அங்கே நிலைமை சீரானதை தொடர்ந்து பிசிசிஐ இந்தியாவிலிருந்து ஸ்பெஷல் விமானத்தை பார்படாஸ் நகருக்கு அனுப்பியுள்ளது. அதில் புறப்பட்ட இந்திய அணியினர் வியாழக்கிழமை காலை நாடு திரும்புகின்றனர். அப்போது பிசிசிஐ சார்பில் விமான நிலையத்தில் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக பிசிசிஐ சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன் படி ஜூலை நான்காம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மும்பையில் உள்ள கடற்கரை சாலையிலும் வான்கடே கிரிக்கெட் மைதானத்திலும் ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. குறிப்பாக கடற்கரை சாலையில் திறந்தவெளி பேருந்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பேரணியாக வரவுள்ளனர்.
2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியினரை போலவே இம்முறையும் ரோகித் சர்மா தலைமையிலான அணி பேருந்தில் அணிவகுத்து வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட உள்ளது. இது பற்றி கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு பின்வருமாறு. “இந்த ஸ்பெஷல் தருணத்தை உங்களுடன் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம்”
இதையும் படிங்க: உண்மையா இந்தியாவை வெச்சு ஃபிக்சிங் பண்றது நீங்க தான்.. இதை நிறுத்துங்க.. ஐசிசி’யை விமர்சித்த டேவிட் லாய்ட்
“எனவே அனைவரும் இந்த வெற்றியை ஜூலை நான்காம் தேதி மாலை 5 மணிக்கு கடற்கரை சாலை மற்றும் வான்கடே மைதானத்தில் கொண்டாடத் தயாராக இருங்கள். கோப்பை வீட்டுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார். அது போக பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா தரப்பிலும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினரை சந்தித்து பாராட்டி ஸ்பெஷல் கவுரவம் கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.