
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அங்கு இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்துள்ளது. அதனால் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
முன்னதாக 2022 முதல் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிய இந்தியா செமி ஃபைனல் வரை சென்று இங்கிலாந்திடம் தோற்றது. பின்னர் 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் விளையாடி ஃபைனல் வரை சென்று அசத்திய இந்தியா கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா இதுவரை 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து தொடர்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
அந்த 3 தொடர்களிலும் இந்தியா குறைந்தபட்சம் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் வாயிலாக தனது முதல் 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலேயே இந்தியாவை செமி ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படித்துள்ளார். இதற்கு முன் தோனி கூட இந்த சாதனையை படைத்ததில்லை.
ஏனெனில் 2009 சாம்பியன்ஸ் ட்ராபியில் தோனி தலைமையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. ஒட்டுமொத்த உலகளவில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மட்டுமே இந்த தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இது போக ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் தலைமையில் 4 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி மிஸ் ஆகிடுச்சு.. ஆனா இந்தியாவுல அந்த கப் மிஸ் ஆகாது – பேட் கம்மின்ஸ் அதிரடி
அதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார். இதற்கு முன் முகமது அசாருதீன் 3 வெற்றிகளை பெற்றது முந்தைய சாதனை. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 20 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 9000 ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்(இன்னிங்ஸ்):
1. ரோஹித் சர்மா: 181
2. சச்சின் டெண்டுல்கர்: 197
3. சௌரவ் கங்குலி: 231
4. கிறிஸ் கெயில்: 246
5. ஆடம் கில்கிறிஸ்ட்: 253