IND vs WI : கெட்டப் மாறினாலும் டக் அவுட்டாக மறக்காத ரோஹித் சர்மா, ரசிகர்களின் கலாய்க்கு மத்தியில் படைத்த வகைவகையான சாதனைகள் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வார்னர் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பெரிய தோல்வியை சந்தித்தது. வீரர்களின் தாமதமான லக்கேஜ் வருகையால் இரவு 11 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அந்த அணியின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 31 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும் எடுத்தனர். அற்புதமாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 8, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 14, சிம்ரோன் ஹெட்மையர் 6, ரோவ்மன் போவல் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 16 ஓவர்கள் வரை அசத்தலாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 68 (52) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் டேவோன் தாமஸ் 31* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரில் 141/5 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் இந்த சுற்றுப் பயணத்தின் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெற்றுள்ளது.

- Advertisement -

ஏமாற்றிய ரோஹித்:
மேலும் ஒருநாள் போட்டிகளில் ஒயிட்வாஷ் தோல்வியை பரிசளித்து முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த அந்த அணி 1 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ளது. இந்த நிலைமையில் இத்தொடரின் 3-வது போட்டி ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அதே வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசை எளிதாக வெற்றி பெற விடாமல் கடைசி ஓவர் வரை இழுத்து வந்த இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராடினார்கள். ஆனால் பேட்டிங்கில் 150 ரன்களைக் கூட எடுக்காத காரணத்தாலேயே தோல்வியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக ஓபேத் மெக்காய் வீசிய இப்போட்டியின் முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மா கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டானது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் அதனால் மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவிற்கு அடுத்து வந்த வீரர்களும் அழுத்தத்தால் பெரிய ரன்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

- Advertisement -

வகையான டக்:
இப்போட்டியில் டக் அவுட்டான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை தொடர்ந்து தனது வசம் வைத்துள்ளார். அதிலும் 2-வது இடத்திலிருக்கும் ராகுலை விட அவர் இரு மடங்கு டக் அவுட்டாகியுள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 8*
2. கேஎல் ராகுல் : 4
3. ஆசிஸ் நெஹ்ரா : 3
4. வாஷிங்டன் சுந்தர் : 3
5. யூசுப் பதான் : 3
6. தினேஷ் கார்த்திக் : 3
7. சுரேஷ் ரெய்னா : 3
8. விராட் கோலி : 3
9. ரிஷப் பண்ட் : 3

இதுபோக டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக டக் அவுட்டான இந்திய வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 6*
2. ஆஷிஸ் நெஹ்ரா : 3
3. கேஎல் ராகுல் : 3
4. யூசுப் பதான் : 3

- Advertisement -

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் தன் வசமாக்கி வருகிறார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 4*
2. ஷ்ரேயஸ் ஐயர் : 2
3. தினேஷ் கார்த்திக் : 2
4. ரிஷப் பண்ட் : 2

அத்துடன் ஷிகர் தவானுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் அவுட்டாகும் 2-வது இந்திய கேப்டன் என்ற பெயரையும் பெற்றார். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான் : இலங்கைக்கு எதிராக, 2021
2. ரோகித் சர்மா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022*

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே டக் அவுட்டான 3-வது இந்திய தொடக்க வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் : ஜிம்பாப்வேக்கு எதிராக, 2016
2. பிரிதிவி ஷா : இலங்கைக்கு எதிராக 2021
3. ரோகித் சர்மா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022*

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான ஆசிய பேட்ஸ்மேன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. கெவின் ஒப்ரயன் : 42
2. ரோஹித் சர்மா : 41*
3. முஸ்தபிசுர் ரஹீம் : 38
4. ஷாஹித் அப்ரிடி : 37
5. முஹமதுல்லா : 36

ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக டக் அவுட்டான பேட்ஸ்மென் என்ற சாதனையை படைத்துள்ள அவர் இந்தியாவுக்காக விளையாட கெட்டப் மாறினாலும் டக் அவுட்டாக மறப்பதில்லை என்று ரசிகர்கள் அவரை கிண்டலடிக்கிறார்கள்.

Advertisement