IND vs ENG : தான் அடித்த சிக்ஸரால் காயப்பட்டு துடித்த சிறுமி – போட்டி முடிந்ததும் ரோஹித் செய்த நெஞ்சை தொடும் நிகழ்வு

Rohit Sharma Indian Fans baby Girl
- Advertisement -

லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 12-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் நெருப்பான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 25.2 ஓவர்களில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

அந்த சமயத்தில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் முகமது ஷமியின் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்தை காப்பாற்ற முயன்ற மொயின் அலியை 14 (18) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லரை 30 (32) ரன்களிலும் காலி செய்த ஜஸ்பிரித் பும்ரா மொத்தமாக சாய்த்தார். அதனால் 59/7 என திண்டாடிய இங்கிலாந்து டேவிட் வில்லி 21, கார்ஸ் 15 என பவுலர்கள் கணிசமான ரன்கள் எடுத்ததால் 100 ரன்களை கடந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அவமானத்திற்கு உள்ளானது.

- Advertisement -

மிரட்டிய ரோஹித்:
அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய இந்தியாவின் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 111 என்ற எளிதான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்கு பின் தமக்கு பிடித்த ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஏற்கனவே நொறுங்கிப் போன இங்கிலாந்தை தங்களது அபார பேட்டிங்கால் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 18.4 ஓவரில் 114/0 ரன்களை எட்ட வைத்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

அதில் ஒருபுறம் மெதுவாக பேட்டிங் செய்த தவான் 4 பவுண்டரியுடன் 31* (54) ரன்கள் எடுக்க மறுபுறம் வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்களை குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்தார். மேலும் இப்போட்டியில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அதிவேகமாக 250 சிக்சர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

குழந்தையின் மேல்:
முன்னதாக இப்போட்டியில் 111 ரன்களை துரத்த துவங்கிய இந்தியா 14/0 ரன்களில் இருந்தபோது 5-வது ஓவரை வீசிய டேவிட் வில்லியின் 3-வது பந்தில் தமக்கே உரித்தான புல் ஷாட் அடித்த ரோகித் சர்மா 79 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்டார். வழக்கம்போல ரசிகர்கள் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி சென்ற அந்த பந்து துரதிர்ஷ்டவசமாக தனது தந்தையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த குட்டி இளம் இந்திய ரசிகையின் பிஞ்சு உடம்பில் மேல் பட்டது. அதை கவனித்த ரோகித் சர்மா சில நிமிடங்கள் பேட்டிங் செய்வதை நிறுத்திவிட்டு ரசிகருக்கு என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் பார்த்தார்.

இருப்பினும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த ரசிகைக்கு என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரின் தந்தை தனது செல்லக் குழந்தையின் மீது பந்து பட்ட முதுகுப் பகுதியில் வலியை போக்கும் வகையில் தேய்த்து விட்டார். மேலும் உடனடியாக அருகே இருந்த இங்கிலாந்து அணியின் மருத்துவக் குழுவினரின் சிலர் அங்கே சென்று அந்த குழந்தைக்கு தேவையான முதலுதவிகளை அளித்தனர். நல்லவேளையாக அந்த குழந்தைக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் அடுத்த சில நிமிடங்களில் போட்டி மீண்டும் நடைபெற துவங்கிய முடிந்தது.

நெஞ்சைத்தொட்ட ரோஹித்:
இறுதியில் போட்டி முடிந்ததும் ஹெல்மெட்டை கூட கழற்றாமல் பெவிலியனுக்கு திரும்பாமல் நேராக அந்த குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி சென்ற ரோகித் சர்மா அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து நலம் விசாரித்தார். இந்தியாவுக்காக கேப்டனாக விளையாடும் அவர் ரசிகர்கள் இல்லாமல் இந்திய அணி இல்லை என்பதை தெரிந்து ஒரு குழந்தை ரசிகரின் மேல் எதிர்பாராமல் பட்ட பந்துக்காக இப்படி நேராக சென்று நலம் விசாரிப்பது உண்மையாகவே ரசிகர்களின் மீது அவர் வைத்துள்ள பாசத்தை காட்டுகிறது.

இறுதியில் அந்த குழந்தைக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி படுத்துவதற்காக அவரின் தந்தை “மீரா செல்வி” எனும் தனது 6 வயது குழந்தையுடன் செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement