43 வருடங்களுக்கு பின் – வரலாற்றில் 2வது முறையாக காயத்தையும் தாண்டி இந்தியாவுக்காக களமிறங்கிய ஹிட்மேன்

Rohit Sharma Injury
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா டிசம்பர் 7ஆம் தேதியன்று நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி பரிதாபமாக தோற்றது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 69/6 என தடுமாறினாலும் 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த முகமதுல்லா 77 ரன்களும் மெஹதி ஹசன் 100* ரன்களும் குவித்ததால் 50 ஓவரில் 271/7 ரன்களை எடுத்து மிரட்டியது.

அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஃபீல்டிங் செய்யும் போது காயமடைந்ததால் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்காத நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி 5, ஷிகர் தவான் 7, கேஎல் ராகுல் 14, வாஷிங்டன் சுந்தர் 19 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 65/4 என திண்டாடிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

குவியும் பாராட்டுக்கள்:
அதனால் வேறு வழியின்றி காயத்துடன் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கிய நிலையில் ஷார்துல் தாகூர் 7, தீபக் சஹர் 11 போன்ற டெயில் எண்டர்கள் கணிசமான ரன்களை கூட எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதிலும் குறிப்பாக 48வது ஓவரை முழுமையாக எதிர்கொண்டும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுக்காத சிராஜ் அவுட்டானார். ஆனாலும் கை விரலுக்கு கட்டு போட்டுக்கொண்டு வலியுடன் ரோகித் சர்மா அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

முஸ்தஃபிசுர் ரகுமான் வீசிய அந்த ஓவரில் முழு மூச்சுடன் போராடிய ரோகித் சர்மா 0, 4, 4, 0, 6, 0 என எதிரணிக்கு பயத்தை காட்டி 51* (28) ரன்கள் எடுத்தாலும் இந்தியா 15 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பரிதாபமாக தோற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் வங்கதேசம் இத்தொடரை வென்றாலும் இந்தியாவுக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக்கு போராடும் தைரியமான முடிவை எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா அனைவரது மனதை வென்றார். ஏனெனில் இது போல் விளையாடுவது காயத்தை அதிகமாக்கி அந்த வீரரின் கேரியரை மொத்தமாக முடிக்கும் அளவுக்கு மோசமான முடிவுகளில் கொண்டு போய் விடலாம்.

- Advertisement -

இருப்பினும் முதலுதவியை மட்டும் எடுத்துக்கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை நாட்டுக்காக உயிரைக் கொடுக்க தயார் என்ற வகையில் செயல்பட்டு வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த அவரது போராட்டமும் தன்னம்பிக்கையும் தைரியமும் இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டுள்ளது. சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆன்ட்டிகுவாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தாடை உடைந்து ரத்தம் வழிந்தும் பிரைன் லாராவின் விக்கெட்டை எடுத்துவிட்டு தான் செல்வேன் என்ற வகையில் கட்டுப் போட்டு கொண்டு செயல்பட்ட ஜாம்பவான் அனில் கும்ப்ளே இறுதியில் வெற்றியும் கண்டார்.

அதற்கு பின் யுவராஜ் சிங், தோனி, அஷ்வின் போன்ற வீரர்கள் அவ்வப்போது இதே போல் காயங்களுடன் விளையாடியிருந்தாலும் இப்போட்டியில் ரத்தம் வரும் அளவுக்கு ரோகித் சர்மா சந்தித்த காயத்தை போல் காயமடைந்து விளையாடியதில்லை. அந்த வகையில் அனில் கும்ப்ளேவுக்கு பின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தைரியமான முடிவுடன் விளையாடிய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 43 வருடங்கள் கழித்து 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய இந்திய கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன் கடந்த 1975 – 1979 ஆகிய காலகட்டங்களில் முன்னாள் கேப்டன் ஸ்ரீனிவாசன் வெங்கட்ரராகவன் மற்றும் 1976 – 1978 ஆகிய காலகட்டங்களில் பிசன் பேட்டி ஆகியோர் மட்டுமே 9வது இடத்தில் களமிறங்கியுள்ளார்கள். அவர்கள் கூட பவுலர்கள் என்பதால் 9வது இடத்தில் களமிறங்கினார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இப்போட்டியில் ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருந்தும் காயமடைந்ததால் 9வது இடத்தில் களமிறங்கினார் என்பது உண்மையாகவே இனி வரலாற்றில் காலத்திற்கும் பேசப்போகும் ஒரு நிகழ்வாகும்.

Advertisement