IND vs AUS : உண்மையை புரிஞ்சுக்கிட்டேன், ரிஷப் பண்ட் – டிகே ஆகியோரது வாய்ப்பு பற்றி ரோஹித் நேரடியாக பேசியது என்ன

Rohit-and-Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்ற இந்தியா 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை நம்பர் 1 டி20 அணி என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடைபோட்டு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

Dinesh Karthik

- Advertisement -

அத்தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா எடுத்த சில முடிவுகள் தோல்வியை கொடுத்தது. குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் காயமடைந்த ஜடேஜாவுக்கு பதில் தீபக் ஹூடாவை மட்டும் மாற்ற வேண்டிய அவர் சம்பந்தமின்றி தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதில் ஏற்கனவே அறிமுகமானது முதல் 58 போட்டிகளில் சொதப்பியதை போல் மீண்டும் ரிஷப் பண்ட் சொதப்பினார். மறுபுறம் சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைய குறைவாக எடுத்த 10 – 15 ரன்களை அடிக்கக் கூடிய தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

புரிந்துகொண்ட ரோஹித்:
அத்துடன் ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக்க்கு முழுமையான வாய்ப்பு கொடுக்காமல் அதிரடியாக நீக்கியதற்காக ரோகித் சர்மா கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதனால் பாடத்தை கற்ற அவர் இந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டிகளிலும் முழுமையான வாய்ப்புகளை கொடுத்தார். ஆனாலும் மீண்டும் அவரது திறமையை நம்பாமல் முதல் போட்டியில் அவருக்கு முன்பாக அக்சர் படேலை பேட்டிங் செய்ய அனுப்பியதால் மீண்டும் ரோகித் சர்மா விமர்சனங்களை சந்தித்தார்.

RIshabh Pant Dinesh Karthik

அப்போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கி செட்டிலாக வாய்ப்பு கிடைக்காத தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் 2வது போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கி வெறும் 2 பந்துகளை எதிர்கொண்டு 10* (2) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். நேற்றைய போட்டியில் மீண்டும் 1 பந்து மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு கிடைத்தது. அப்படி ஆசிய கோப்பையிலிருந்து இதுவரை சரியான முழுமையான வாய்ப்பை பெறாத தினேஷ் கார்த்திக்க்கு விரைவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க மற்றும் டி20 உலக கோப்பையில் தேவையான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பைக்கு முன்பாக அந்த இருவருமே தேவையான போட்டிகளில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஆசிய கோப்பையில் அந்த இருவருமே விளையாடுவதற்கு போட்டி போட்டனர். ஆனால் தற்போது தினேஷ் கார்த்திக்க்கு மேலும் சில போட்டிகள் தேவைப்படுவதாக நான் உணர்கிறேன். இந்த தொடரில் அவர் அரிதாகவே பேட்டிங் செய்தார். அதுவும் 3 பந்துகள் என்று நினைக்கிறேன்”

Rohit

“ஆனால் அது போதுமான வாய்ப்பு கிடையாது. அதே சமயம் ரிஷப் பண்ட்க்கும் வாய்ப்புகள் தேவைப்படுகிறது. இருப்பினும் இந்த தொடரை வைத்து பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்யாமல் இருப்பது முக்கியமாகும். ஆனாலும் தென் ஆப்ரிக்க தொடரில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பது எனக்கு தெரியாது. நாங்கள் அவர்களுடைய பந்து வீச்சு துறையை பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார்போல் வீரர்களை தேர்வு செய்ய உள்ளோம். எனவே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இடது கை அல்லது வலது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம்”

“ஆனால் எங்களது வீரர்களை நாங்கள் கவனத்துடன் கையாள்வோம். ஏனெனில் உலக கோப்பைக்கு தயாராக அவர்களுக்கும் வாய்ப்புகள் அவசியம் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் எங்களது அணியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும் என்பது துரதிஷ்டவசமாகும்” என்று கூறினார். அதாவது ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுப்பது முக்கியம் என்றாலும் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் சரியான முழுமையான வாய்ப்பை பெறாத தினேஷ் கார்த்திக்க்கு வரும் போட்டிகளில் தேவையான வாய்ப்பு வழங்கப்படும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement