2021 டி20 உ.கோ தோற்ற பின் அணியை மொத்தமாக மாற்றியிருக்கோம், இந்தியாவின் புதிய அதிரடி பாதை பற்றி ரோஹித் சர்மா கருத்து

Rohith
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளின் முடிவில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய இந்தியா 3 – 1* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியுடன் கடந்த 2021 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. அதிலும் ரோகித் சர்மா தலைமையில் கடைசியாக இந்தியா பங்கேற்ற 9 டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று வருகிறது.

INDIA IND vs ENG Rohit Sharma

- Advertisement -

அடுத்ததாக விரைவில் துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்தியா அதன்பின் ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் டி20 தொடர்களில் பங்கேற்று இறுதியாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க தயாராகியுள்ளது. தற்போதைய நிலையில் ஏற்கனவே விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத தொடர்களிலும் அசத்தும் இந்தியா உலக கோப்பையை வெல்வதற்கு கிட்டதட்ட தயாராகி விட்டது என்றே கூறலாம்.

அதிரடி பாதை:
முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியடைந்து லீக் சுற்றுடன் நடையை கட்டியது. ஆனால் அதன்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா ஏற்கனவே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமுள்ளதால் அதை பயன்படுத்தி நிறைய மாற்றங்களை செய்து தற்போது எந்த மோசமான சூழ்நிலையில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து அதிரடியாக விளையாடும் அணியாக மாற்றியுள்ளார்.

rohith

இந்த வருடம் 199/2, 211/4, 225/7, 198/8, 198/9, 190/6, 191/5 என உலகிலேயே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற இதர அணிகளைக் காட்டிலும் அதிகபட்சமாக 7 முறை 190க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்து வருவதே இதற்குச் சான்றாகும். இந்நிலையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் தடுமாறிய இந்தியாவின் அணுகுமுறையை மாற்றியதே அதிரடி பாதையில் நடக்க முக்கிய காரணமென்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மாற்றியுள்ளோம்:
இதற்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றி வருகிறார் என்று பாராட்டியுள்ள ரோகித் சர்மா இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “துபாயில் கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் நாங்கள் தகுதி பெற முடியாமல் வெளியேறிய போது எங்களது அணுகுமுறையையும் ஆட்டத்தையும் மாற்றம் வேண்டும் என்பதில் தெளிவான முடிவை எடுத்தோம். அதிலும் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் அதிரடியை குறைக்காமல் எப்படி விளையாட வேண்டும் என்ற செய்தியை அனைத்து வீரர்களிடமும் தெரிவித்துள்ளோம். அவர்களும் அனைத்து சவால்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நாங்களும் அதிக மாற்றங்களை செய்வது கிடையாது”

dravid

“அதிலும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் தலைமையில் தான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சில போட்டிகளில் விளையாடினேன். அதன் காரணமாக எங்களுக்கிடையே நல்ல புரிதல் உள்ளது. பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நாங்கள் சந்தித்த போது தனியாக ஒரு அறையில் அமர்ந்து எப்படி விளையாட வேண்டும் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதை இணைந்து விவாதித்து முடிவு எடுத்தோம். அந்த வகையில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான எண்ணங்களைக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

இங்கிலாந்து போன்ற அணிகள் சொந்த மண்ணில் ஒரு சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி விட்டோம் என்பதற்காக உலகத்திற்கே கிரிக்கெட்டை எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்று வாய் வார்த்தை பேசுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சத்தமின்றி இந்தியாவை அதிரடிப் படையாக மாற்றி வரும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி உண்மையாகவே பாராட்டுக்குரியவர்களாக உள்ளனர்.

Advertisement