திலக் வர்மா 2023 உ.கோ அணியில் தேர்வு செய்யப்படுவாரா? முன்னாள் வீரர்களின் கோரிக்கைக்கு – கேப்டன் ரோஹித் சர்மா பதில்

Rohit Sharma Tilak Varma
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதை விட 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோஹித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா அவரை டாப் 6 பேருமே வலது கை வீரர்களாக இருக்கின்றனர். அதே போல 2019 உலகக் கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்த அம்பத்தி ராயுடுவை கழற்றி விட்டு தேர்வு செய்யப்பட்ட விஜய் சங்கர் சுமாராக செயல்பட்டு வெளியேறிய நிலையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்றவர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ரோஹித்தின் பதில்:
அதில் காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக யாருமே நிலைக்காத நிலையில் ஒரு வழியாக அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தும் தற்போது காயமடைந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் ஒரே கல்லில் 2 மாங்காய் போல தற்போது வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி அசத்தி வரும் திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக சவாலான பிட்ச்சில் இதர கிரிக்கெட் வீரர்கள் தடுமாறிய போது மிகச் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் குறைந்தபட்சம் உலகக்கோப்பையில் பேக்-அப் வீரராக தேர்வு செய்ய வேண்டுமென அஸ்வின் கேட்டுக் கொண்டார். மேலும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் 55 சராசரியை கொண்டுள்ள அவர் மைக்கேல் பெவன் போல விளையாடுவதால் ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகும் பட்சத்தில் 2023 உலகக்கோப்பையில் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது போக வாசிம் ஜாஃபர், பிரக்யான் ஓஜா போன்ற சில முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி 2022, 2023 சீசன்களில் தலா 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த திலக் வர்மா தற்போது இந்தியாவுக்காகவும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். குறிப்பாக 20 வயது என்று நம்ப முடியாத அளவுக்கு முதிர்ச்சியுடன் செயல்படும் அவர் வெற்றியை பெற வேண்டும் என்ற பசியுடன் விளையாடுவது பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா அதற்காக இப்போதே உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பது தமக்கு தெரியாது என கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை நான் 2 வருடங்களாக பார்த்து வருகிறேன். நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வெற்றி காண வேண்டும் என்று பசியுடன் அவர் விளையாடுவது மிகவும் முக்கியமான அம்சமாகும். இந்த வயதில் அவர் மிகவும் முதிர்ச்சடைந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவருக்கு அவருடைய பேட்டிங் நன்றாகத் தெரிகிறது”

இதையும் படிங்க:IND vs WI : நாளைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

“நான் அவருடன் பேசும் போது இந்த பையனுக்கு எங்கு அடிக்க வேண்டும் எந்த சமயத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் போன்றவை தெரிந்திருப்பதை புரிந்து கொண்டேன். இவை தான் அவரைப் பற்றி நான் சொல்லக்கூடிய விஷயங்களாகும். ஆனால் உலகக்கோப்பை வாய்ப்பு பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் நிச்சயமாக மிகவும் திறமையான அவர் இதுவரை இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement