
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது. முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வாலை பெஞ்சில் அமர வைத்த ரோகித் சர்மா நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்கினார்.
அத்துடன் 5, 6வது இடங்களில் விளையாடக்கூடிய ரிஷப் பண்ட் 3வது இடத்தில் களமிறங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது. இந்நிலையில் விராட் கோலி போன்ற எந்த வீரர்களையும் இந்திய அணி சார்ந்திருக்க விரும்பவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ரிஷப் பண்ட்டுக்கு 3வது இடத்தில் வாய்ப்பு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரோஹித் பதில்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய வெற்றிக்காக ஒரு சிலர் தனிநபர் வீரர்களை சார்ந்திருக்க விரும்பவில்லை. 11 வீரர்களும் வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக சில வீரர்கள் வெற்றிக்கான சாவியாக செயல்படுவார்கள். ஆனால் அனைவரும் தங்களால் முடிந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை”
“ஆனால் அப்போட்டியில் நாங்கள் நல்ல ரன்கள் அடித்து வெற்றியும் பெற்றோம். இருப்பினும் நிறைய பயிற்சிகளை எடுத்து உலகம் முழுவதிலும் விளையாடியுள்ள விராட் கோலியிடம் ஏகப்பட்ட அனுபவம் இருக்கிறது. அதை எதுவும் தோற்கடிக்க முடியாது. உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஐபிஎல் தொடரில் அவருடைய சில போட்டிகளை பார்க்க வேண்டியிருந்தது”
“முதல் பகுதியில் அவருடைய செயல்பாடுகளை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். அவரைப் போன்ற திறமையான வீரருக்கு சரியான இடத்தை கண்டறிவது கடினம். ஆனால் ஆரம்பத்தில் எங்களிடம் 3 வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர் அங்கே விளையாடுவது நன்றாக இருக்கும். இந்தத் தொடர் நகரும் போது ஸ்பின்னர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதில் அவருடைய வேலை முக்கியமானதாக இருக்கும். மற்றவர்களை விட மனதளவிலும் திறமை அளவிலும் உயர்ந்து நிற்பதாலேயே எங்கள் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடுகின்றனர்”
இதையும் படிங்க: 1 ரன்னில் இங்கிலாந்தின் உலக சாதனையை உடைத்த ஆஸி.. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போட்டி வினோத உலக சாதனை
“2021 காபா டெஸ்ட் போட்டியை நாங்கள் மனதளவில் வலுவாக இருந்ததாலேயே வென்றோம். அந்தத் தொடரில் எங்களுடைய வீரர்கள் உடலில் பல இடங்களில் அடி வாங்கினார்கள். அது போன்ற சூழ்நிலையில் உங்களை சோதிக்கும். எங்களுடைய வீரர்களும் தங்களை கடினமான சூழ்நிலைகளில் புகுத்திக்கொள்ள விரும்புவார்கள். எனவே உலகக் கோப்பையில் நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு பெரியது இருக்க முடியாது” என்று கூறினார்.