WTC Final : இங்கிலாந்தில் மட்டும் உங்களையே நீங்க நம்பக்கூடாது, அதுக்கு நாங்க தயாரா இருக்கோம் – ஃபைனலுக்கு முன் ரோஹித் பேட்டி

Rohit Press
- Advertisement -

ஐசிசி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொள்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இரு நாடுகளுக்கும் சாதகமாக அல்லாமல் பொதுவான இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவது இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பிறந்து வளர்ந்த இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் தடுமாறுவது வழக்கமாகும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தில் மட்டும் வெயில் காலத்தில் சர்வ சாதாரணமாக மழை பெய்யும். அது போக ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் வெயில், ஈரப்பதம், மேகமூட்டம் என அங்கு நிலவும் பல்வேறு விதமான வானிலை எளிதில் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அது போன்ற வானிலை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அதைப்பற்றி அனைவரும் பெரிதாக பேசி வருகிறார்கள்.

தயாரா இருக்கோம்:
இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் கால சூழ்நிலைகளை நம்பி போட்டியில் எந்த தருணத்திலும் “செட்டாகி விட்டோம்” என்ற நம்பி பேட்ஸ்மேன்கள் விளையாடக்கூடாது என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2021இல் இதே ஓவல் மைதானத்தில் சதமடித்து இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் இந்த ஃபைனலில் இங்கிலாந்தின் கால சூழ்நிலைகளை சமாளித்து விளையாட இந்தியா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

rohith 1

“இங்கிலாந்தில் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சவாலான சூழ்நிலை நிலவும். அங்கே நீங்கள் அதிக நேரம் எடுத்து விளையாடுவதற்கு தயாராக இருந்தால் வெற்றிகரமாக செயல்படலாம். அந்த சூழ்நிலைகளில் நீங்கள் நீண்ட நேரம் கவனம் செலுத்தினால் “இப்போது பவுலர்களை அடிக்கலாம்” என்ற உள்ளுணர்வு ஒரு கட்டத்தில் தாமாகவே வரும். மேலும் மைதானத்தில் நீங்கள் நிலைத்து நின்று உங்களுடைய பலம் என்ன என்பதை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். நான் எங்களுடைய வெற்றிகரமான வீரர்களை இப்போட்டியில் வெற்றிகரமாக செயல்பட வைப்பதற்கு முயற்சிக்க உள்ளேன்”

- Advertisement -

“மேலும் ஓவல் மைதானத்தில் ஸ்கொயர் பவுண்டரி வேகமாக இருக்கும் என்பதை கடந்த முறை விளையாடியதில் புரிந்து கொண்டேன். அத்துடன் போட்டியின் எந்த தருணத்திலும் நீங்கள் செட்டாகி விட்டோம் என்ற முடிவை எடுக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன். ஏனெனில் இங்கே வானிலை அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார். முன்னதாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

Rohit Sharma

இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் அட்டகாசமாக செயல்பட்டு சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அது போல டி20 கிரிக்கெட்டில் விளையாடி திடீரென இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும் அதற்கான டெக்னிக்கை பின்பற்றி வெற்றிக்கு போராட உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: WTC Final : 8 வருஷமா அவங்களுக்கு நேரம் சரியில்ல. அதனால் கண்டிப்பா இந்தியா தான் ஜெயிக்கும் – புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

“டி20 கிரிக்கெட்டில் விளையாடி விட்டு நேரடியாக இப்போட்டியில் விளையாடுவது நிச்சயமாக சவாலை கொடுக்கும். குறிப்பாக பல்வேறு வகையான கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும் போது ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றவாறு மிக விரைவாக உங்களுடைய டெக்னிக்கையும் மனதையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தற்போதுள்ள நிறைய இளம் வீரர்கள் அதை செய்வதில்லை. இருப்பினும் எங்களைப் போன்ற மூத்த வீரர்கள் அதை செய்து தொடர்ந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறோம்” என்று கூறினார். அத்துடன் என்ன தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வந்தாலும் டெஸ்ட் போட்டிகள் தான் மகத்தானது என்றும் ரோஹித் சர்மா பாராட்டினார்.

Advertisement