
இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் 2020 சுதந்திர தினத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியை ஓய்வு பெற்றதை நினைவு கூர்ந்தனர். ஏனெனில் அவருடைய தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராப்பியை வென்றது.
அதனால் உலகிலேயே மூன்று விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் தோனி சாதனை படைத்தார். அதை விட விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஜடேஜா ஆகியோர் தற்போதைய இந்திய அணியின் முதுகெலும்பு வீரர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு ஆரம்ப காலங்களில் தேவையான வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்து வளர்த்த தோனி இந்திய அணியின் வருங்காலத்தையும் சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர்.
ரோஹித் பாராட்டு:
அதற்காக சேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்ற சீனியர் வீரர்களை தைரியமாக கழற்றி விட்டதற்காக தோனி இன்றளவும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் எம்எஸ் தோனி தங்களைப் போன்ற வீரர்களுக்கு மிகப்பெரிய ஆதரவும் வாய்ப்பும் வழங்கியதாக தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலேயே தங்களால் இந்தளவுக்கு வளர முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “2007ஆம் ஆண்டு தோனியின் கீழ் நான் உலகக் கோப்பையில் அறிமுகமானேன். அதன் பின் நாங்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஒன்றாக கிரிக்கெட்டில் விளையாடினோம். அவர் வீரரின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் செயல் திறன் என்னவாக இருந்தாலும் எப்போதும் ஊக்கத்தை கொடுப்பார்”
“குறிப்பாக அணியில் நாம் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு வீரர்களுக்கு ஏற்படாத அளவுக்கு அவர் ஆதரவு கொடுத்தது முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். நிறைய போட்டிகளில் விளையாடிய வீரர்கள் கூட மோசமான சூழ்நிலைகளில் செல்லக்கூடும். அது போன்ற வீரர்களுக்கும் தோனி முதுகில் தட்டிக் கொடுத்து கவலைப்பட வேண்டாம் உங்களிடம் அனைத்து திறனும் இருப்பதால் களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என்று சொல்வார்”
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடருக்கு இணையாக அடுத்த ஆண்டு வரவுள்ள புதிய தொடர் – பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை
“உங்கள் கேப்டனிடமிருந்து உங்களுக்கு அத்தகைய ஆதரவு தான் எப்போதும் தேவை. அந்த வகையில் தோனி கேப்டனாக இருந்த போது எங்கள் அனைவருக்கும் அது தான் கிடைத்தது” என்று கூறினார். அப்படி தோனியின் ஆதரவுடன் வளர்ந்த ரோகித் சர்மா தற்போது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற அவருடைய சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.