ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. அதிலும் கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வெற்றிகள் பெற்றுள்ள மும்பை மீண்டும் எதிரணிகளால் கட்டுப்படுத்த முடியாத அணியாக மிரட்டி வருகிறது. அதற்கு அந்த அணியின் ஜாம்பவான் ரோகித் சர்மா ஃபார்முக்கு வந்துள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சமீப காலங்களாகவே ரோஹித் சர்மா சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அந்த அணுகுமுறையில் இந்தியாவுக்காக கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் சாதனை படைத்தார். அதே அணுகுமுறையுடன் 2025 ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வந்த ரோஹித் சர்மாவை ஓய்வு பெறுமாறு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
சுயநலம் கிடையாது:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத ரோகித் சென்னைக்கு எதிரான போட்டியில் 76*, ஹைதராபாத்துக்கு எதிராக 70 ரன்கள் அடித்து மும்பை அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற உதவினார். இந்நிலையில் தாம் சொந்த சாதனைகளுக்காக சுயநலமாக விளையாடக்கூடியவன் கிடையாது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதற்காக தாம் தம்முடைய அணியின் வெற்றி மற்றும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் பைத்தியக்காரத்தனமாக விளையாடக்கூடியவன் கிடையாது என்றும் ரோஹித் கூறியுள்ளார்.
இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ஆட்டம் மாறாது. இந்த வகையான ஆட்டத்தையே அணி எனக்கு கொடுத்துள்ளது. நான் தொடர்ச்சியாக விளையாடப் போகிறேன். எனது ஆட்டம் சாதனைகளைத் துரத்துவது கிடையாது. எனது கவனம் ரன்கள் அடித்து வெற்றிகளில் பங்காற்றுவதில் இருக்கிறது. ரன்கள் அடிப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்?”
பைத்தியமும் கிடையாது:
“நானும் அதை விரும்புகிறேன். இந்த வருடமும் அதை நான் மீண்டும் செய்கிறேன். இந்த பதிலைச் சொல்லி எனக்கு களைப்பாகி விட்டது. கண்டிப்பாக ரன்கள் அடிக்காத போது நீங்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள். தடுமாற்றமாக விளையாடும் போது வலியைப் பார்ப்பீர்கள். ஆனால் அது என்னுடைய போட்டியைத் தடுப்பதை நான் விரும்பவில்லை. எனது ஆட்டம் அதிக ரிஸ்க் நிறைந்ததால் அவுட்டாவேன் என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: இந்தியாவுக்காக உழைச்சு அந்த சாதனை படைச்சும் கழற்றி விட்டாங்க.. இங்கிலாந்துக்கு ரெடியா இருக்கேன்.. புஜாரா
“அதற்காக நான் அவுட்டாவதை பற்றி கவலைப்படவில்லை அல்லது அணியின் வெற்றிக்குப் பங்காற்ற விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. மொத்த போட்டியிலும் பைத்தியக்கார மனிதன் போலவும் விளையாடுவதில்லை. அதிரடியாக விளையாடுவதற்காக எனது ஆட்டத்தில் மாற்றங்கள் செய்தது எனக்கு தொடர்ச்சியான வெற்றி முடிவுகளைக் கொடுக்கவில்லை. அதற்காக கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறேன்” எனக் கூறினார்.



