இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் செட்டேஸ்வர் புஜாரா 2010ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அவரைப் போலவே நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை பின்பற்றிய புஜாரா எதிரணி பவுலர்களை கலைப்படயை வைத்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெல்வதற்கு புஜாரா கருப்புக் குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் அதன் பின் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அப்போது இங்கிலாந்தில் கவுண்டி தொடரில் அபாரமாக செயல்பட்ட புஜாரா மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
100 டெஸ்ட் சாதனை:
அந்த வாய்ப்பில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை விளையாடி சாதனை படைத்த புஜாரா மீண்டும் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறினார். அதனால் ஒரேடியாக கழற்றி விடப்பட்டுள்ள அவருக்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணியில் புஜாராவின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக புஜாரா தெரிவித்துள்ளார். அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருப்பதாகக் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவர் வெற்றிகரமாக உச்சகட்ட லெவலில் விளையாடி 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனால் பெரிய ஏமாற்றம் இருக்கும்”
புஜாரா கோரிக்கை:
“ஏனெனில் அதற்காக நீங்கள் கடினமான உழைப்பை வெளிப்படுத்தி இருப்பீர்கள். அதுவே உங்களுடைய வெற்றிக்கான பின்னணியில் இருக்கும். ஆனால் கிரிக்கெட்டின் மீதான காதலால் இப்போதும் எனக்கு நானே தயாராக உத்வேகத்துடன் இருக்கிறேன். அந்தக் காதலால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் கவுன்டி மற்றும் உள்ளூரில் விளையாடி இன்னும் நெருங்கிய தொடர்பு இருக்கிறேன்”
இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை வீரர் விக்னேஷ் புத்தூர்.. என்ன காரணம்? – விவரம் இதோ
“அதனால் ஒருவேளை இந்திய அணிக்கு நான் தேவைப்பட்டால் அதில் அசத்துவதற்காக தயாராக இருக்கிறேன். என்னுடைய ஃபிட்னெஸ் விஷயங்களில் வேலை செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அசத்துவதற்கு தயாராகவே இருக்கிறேன். திறமையான இந்திய அணி இங்கிலாந்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வெற்றி பெறவில்லை. எனவே வாய்ப்பு கிடைத்தால் அதில் இந்தியாவுக்காக எனது சிறந்த பங்களிப்பை கொடுப்பேன். ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்பட்ட என்னால் அங்கேயும் அசத்த முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது. இது நாம் இங்கிலாந்தில் வெல்ல சரியான நேரமாகும்” எனக் கூறினார்.



