IND vs AUS : ஆஸி போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த நேரடி பதில் இதோ

Rohit Sharma Ravichandran Ashwin 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் கோப்பை வென்று சரித்திரம் படைப்பதற்காக தயாராகியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் உள்ள இவ்விரு அணிகளில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் 2023 ஆசிய கோப்பையை வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா சமீபத்திய ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போலவே இப்போட்டியிலும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் விளையாடும் 11 பேர் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் பதில்:
இருப்பினும் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 ஸ்பின்னர்களாக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் அவருக்கு வாய்ப்பு சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஸ்வின் உள்ளே வரவேண்டுமெனில் அதற்கு 3 வேகப்பந்து வீச்சாளர்களில் ஷமி போன்ற யாரையாவது ஒருவரை பெஞ்சில் அமர வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் போன்ற முக்கியமான இடது கை வீரர்களுக்கு சவாலை கொடுக்கும் திறமையை கொண்டுள்ள அஸ்வின் பிறந்து வளர்ந்த சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. மேலும் சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சற்று சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இப்போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் திட்டத்தையும் வைத்திருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது அஸ்வின் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் அதை போட்டி துவங்குவதற்கு முன்பாக பிட்ச்சை பார்த்து விட்டு முடிவெடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது பின்வருமாறு. “ஆம் 3 ஸ்பின்னர்களுடன் விளையாடுவது எங்களுக்கு நல்ல வசதியை கொடுக்கும். ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை நான் வெறும் மித வேகப்பந்து வீச்சாளராக கருதவில்லை”

இதையும் படிங்க:

“அதாவது நல்ல வேகப்பந்து வீச்சாளரான அவர் போதுமான வேகத்தை எட்டக் கூடியவர். எனவே இது எங்களுக்கு சாதகத்தை கொடுக்கிறது. இந்த வகையில் நாங்கள் 3 ஸ்பின்னர் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் வசதியை கொண்டுள்ளோம். அதே சமயம் அது எங்களுக்கு 8வது இடத்தில் பேட்ஸ்மேன் இருப்பதையும் உறுதி செய்து சமநிலையை கொடுக்கிறது. இருப்பினும் இது பற்றி பிட்ச் பார்த்து விட்டு முடிவு செய்வோம் ஆனால் 3 ஸ்பின்னர்கள் நிச்சயமாக நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார்.

Advertisement