
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான இந்த ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டேரல் மிட்சல் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது டேரல் மிட்சல் 118 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 119 ரன்கள் குவித்தார். அதன்மூலம் அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு தொடர்ச்சியாக அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலிலும் அவர் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
அதேவேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி முதலிடத்தை பிடித்திருந்த வேளையில் அவரது முதலிடம் அடுத்த 22 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி வெளியான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் டேரல் மிட்சலும், இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.
அவர்கள் இருவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹீம் ஜாத்ரான் உள்ளனர். அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து நட்சத்திர வீரரான விராட் கோலி ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். மேலும் மற்றொரு இந்திய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : முதல் வங்கதேச வீரராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய முஷ்பிகுர் ரஹீம் – விவரம் இதோ
தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.