ஓடி எடுக்கும் விராட் கோலியை விட டைமிங்கில் அசத்தும் ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் – முன்னாள் பாக் வீரர் பேட்டி

Rohith-1
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது மிகச் சிறந்த செயல்பாடுகளால் கடந்த 10 வருடங்களாக நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இந்திய பேட்டிங் துறையில் தூண்களாக உருவெடுத்துள்ளார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக எதிரணிகளை சிதறடிக்கும் திறமை கொண்ட இவர்கள் ஏற்கனவே ஜாம்பவான்களாக போற்றப்படும் அளவுக்கு சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்து ரசிகர்களால் கிங் கோலி, ஹிட்மேன் சர்மா என்று கொண்டாடப் படுகிறார்கள். இருப்பினும் இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற விவாதங்களும் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அந்த விவாதத்தில் இருவரது செயல்பாடுகளையும் புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது விராட் கோலி தான் சிறந்தவர் என்று வெளிப்படையாக சொல்லலாம்.

ஏனெனில் 2006இல் அறிமுகமான ரோகித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாறி வந்த நிலையில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் போன்ற நிறைய சாதனைகளைப் படைத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதே போல் டி20 கிரிக்கெட்டிலும் அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவரால் கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் அசத்த முடியவில்லை.

- Advertisement -

ரோஹித் தான் சிறந்தவர்:
அந்த வகையில் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரராக மட்டுமே ஜொலித்து வந்த அவர் ஒரு வழியாக 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து உச்சகட்ட பார்மை எட்டிய போது டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். மறுபுறம் 2008 அண்டர்-19 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி 2013க்கு முன்பே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டார்.

மேலும் 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தத் துவங்கிய அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் 24000+ ரன்களையும் 73 சதங்களையும் விளாசி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக தன்னை நிரூபித்துள்ளார். இருப்பினும் கூட அதிரடியாக விளையாடுவதிலும் அசால்டாக புல் ஷாட் அடிப்பதில் ரோகித் சர்மாவும் சீரான வேகத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் விராட் கோலியும் தனித்தனியான திறமையை கொண்ட சரிக்கு சமமான ஜாம்பவான்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

- Advertisement -

இந்நிலையில் நல்ல ஃபிட்னஸ் காரணமாக ரன்களை எடுக்கும் விராட் கோலியை விட நல்ல டைமிங் பயன்படுத்தி ரன்களை எடுக்கும் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக விராட் கோலி, உம்ரான் மாலிக் போன்ற இந்திய வீரர்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“விராட் கோலியை மிகவும் மதிக்கிறேன் ஏனெனில் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். ஆனால் ஒரு பவுலராக ரோகித் சர்மா அவரை விட மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன். காரணம் அவருடைய நுணுக்கங்கள் அபாரமாக உள்ளது. அவர் உலகில் இதர வீரர்களை விட தம்மிடம் அதிக டைமிங் இருப்பது போல் பந்தை எப்போதும் தாமதமாக அடிக்கிறார். அவர் கடந்த 10 – 12 வருடங்களாக உலக கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் விராட் கோலி தன்னுடைய பிட்னஸ் அடிப்படையாக வைத்து ரன்களை எடுக்கிறார்”

இதையும் படிங்க: IND vs AUS : இன்னும் ஒரு விக்கெட் போதும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைக்காக காத்திருக்கும் – ரவி அஷ்வின்

“அவர் ஒரு ரன்னை எடுத்தால் அடுத்த ரன்னுக்கு தயாராகி விடுவார். ஆனால் ரோகித் சர்மா அதை செய்ய மாட்டார். அவர் சிங்கிள் எடுத்தால் அடுத்த ரன் எடுக்க முயற்சிக்க மாட்டார். மாறாக அவர் பவுண்டரிகளை அடித்து பேட்டால் ரன்களை எடுப்பார். விராட் கோலி அதிகமாக ரன்களை ஓடி ஓடி எடுப்பார். நீங்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது அது போல ரன்கள் எடுப்பது தாமாக வரும்” என்று கூறினார்.

Advertisement