22/4 என விழுந்த இந்தியா.. ரிங்குவுடன் சேர்ந்து 190 ரன்ஸ் விளாசி தூக்கி நிறுத்தி ஆப்கனை ஓடவிட்ட ஹிட்மேன்

IND vs AFG 3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய 3வது டி20 போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அதில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வாலை 4 ரன்களில் அவுட்டாக்கிய பரிட் அஹ்மத் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த சிவம் துபே 1 ரன்னில் அவுட்டாக இந்த தொடரில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் கோல்டன் டக் அவுட்டாகி அதை வீணடித்தார்.

- Advertisement -

மிரட்டிய ஹிட்மேன்:
அதனால் 22/4 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா 100 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்போது மறுபுறம் நின்ற கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் சரிவை சரி செய்யும் முனைப்புடன் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் ஆரம்பத்தில் அழுத்தத்தை உடைப்பதற்காக நிதானத்தை கடைபிடித்த இந்த ஜோடி 10 ஓவர்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியை அதிகப்படுத்தியது. அதில் கடந்த போட்டிகளில் டக் அவுட்டாகி விமர்சனத்திற்குள்ளான ரோகித் சர்மா நன்கு செட்டிலான பின் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதற்கு ரிங்கு சிங்கும் எதிர்புறம் சற்று வேகமாக ரன் குவித்து கை கொடுத்ததை பயன்படுத்திய ரோகித் சர்மா நேரம் செல்ல செல்ல ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்க துவங்கினார்.

- Advertisement -

அதே வேகத்தில் டெத் ஓவர்களில் ஆப்கானிஸ்தான் பந்தாடிய ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 5வது சதமடித்து இந்தியாவை 150 ரன்கள் தாண்ட உதவினார். அவருடன் ரிங்கு சிங்கும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்து ரன் ரேட்டை எகிற வைத்தார். இறுதியில் 20வது ஓவரில் 36 ரன்கள் விளாசி கடைசி அவுட்டாகாமல் அட்டகாசம் செய்த அந்த ஜோடியால் ஒரு கட்டத்தில் 100 ரன்கள் தொடுமா என்று எதிர்பார்த்த இந்தியா இறுதியில் 20 ஓவரில் 212/4 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானை தெறிக்க விட்டது.

இதையும் படிங்க: 85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 2 ஆவது வெஸ்ட் இண்டீஸ் வீரராக ஷமர் ஜோசப் படைத்த சாதனை – விவரம் இதோ

குறிப்பாக கடந்த போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் கிண்டல்களுக்கு உள்ளான ரோகித் சர்மா இப்போட்டியில் சதமடித்து 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 121* (69) ரன்களை விளாசி மாஸ் பதிலடி கொடுத்து தன்னை ஹிட்மேன் என்பதை காண்பித்துள்ளார். அவருடன் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிங்கு சிங் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 69* (39) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். மறுபுறம் இந்த ஜோடியை பிரிக்க தவறி கடைசியில் சொதப்பிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரீட் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement