
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் ஜூலை நான்காம் தேதி நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
குறிப்பாக மும்பையின் கடற்கரை சாலையில் திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியினர் கோப்பையுடன் வந்தனர். அவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு மறக்க முடியாத வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் வரவேற்பும் 125 கோடி ரூபாய் பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது.
மோடியும் கேப்டனும்:
அந்த நிகழ்வுக்கு முன்பாக நாடு திரும்பியதும் இந்திய அணியினர் முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது டி20 உலகக் கோப்பையை வித்தியாசமாக நடனம் ஆடிக்கொண்டே சென்று வாங்கியது சஹால் கொடுத்த ஐடியாவா என்று அவர் கேப்டன் ரோகித்திடம் கேட்டார். அதாவது வெற்றிக்கு பின் டபிள்யூடபிள்யூஈ மல்யுத்த மூத்த வீரர் ரிக் ஃபிளேர் போல ரோஹித் சர்மா நடந்து சென்று கோப்பை வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதைப் பற்றி கேட்ட பிரதமர் சரித்திர வெற்றியை கொடுத்த பார்படாஸ் மண்ணை கொஞ்சம் சாப்பிட்டது பற்றியும் ரோஹித்திடம் கேட்டார். அதற்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்தது பின்வருமாறு. “நாங்கள் வெற்றி பெற்றதும் அந்த தருணத்தை மறக்காமல் வைத்திருக்க விரும்பினேன். நாங்கள் அந்த பிட்ச்சில் விளையாடி வெற்றி கண்டோம். அந்த தருணத்திற்காகவே நாங்கள் காத்திருந்தோம்”
“ஏனெனில் கடந்த வருடங்களில் வெற்றியை நெருங்கியும் நாங்கள் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியவில்லை. இருப்பினும் இம்முறை அனைவருடைய முயற்சியால் நாங்கள் சாதித்தோம். அந்த வெற்றியை கொடுத்த பிட்ச் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனவே அந்த தருணத்தில் அது (மண்ணை சாப்பிட்டது) நடந்தது. வெற்றி பெற்றது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய தருணம்”
இதையும் படிங்க: ரோஹித் மற்றும் கோலியை கொண்டாடுங்க.. ஆனா இப்படி பண்ண கூடாது.. ராபின் உத்தப்பா காட்டம் – விவரம் இதோ
“அதற்காகவே நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். எனவே அந்த தருணத்தை எளிதாக விட்டு விடக்கூடாது என்று அனைத்து வீரர்களும் என்னிடம் சொன்னார்கள். வித்தியாசமாக நடந்து சென்று கோப்பையை வாங்கும் ஐடியாவை சஹால், குல்தீப் ஆகிய இருவருமே கொடுத்தார்கள்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களிடமும் பிரதமர் மோடி தனித்தனியே உரையாடியது குறிப்பிடத்தக்கது.