ஆசிய கோப்பை 2023 தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3:00 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் சேர்க்கப்படுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.
அதே போல முகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு எதிராக முதல் ஓவரை நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசினார். குறிப்பாக இதே தொடரில் லீக் சுற்றில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு எதிராக புதிய பந்தை ஸ்விங் செய்து அனலை பறக்க விட்ட அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை க்ளீன் போல்ட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.
ரோஹித்தின் பதிலடி:
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஒரே போட்டியில் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற மாபெரும் சாதனையும் ஷாஹீன் அப்ரிடி படைத்தார். அதே போல இந்த போட்டியிலும் பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் வீசிய முதல் ஓவரின் முதல் 5 பந்துகளை தொட முடியாமல் ரோகித் சர்மா வழக்கம் போல தடுமாறினார்.
ஆனால் கடைசி பந்தில் தம்முடைய பலமான ஃபுல் ஷாட்டை பயன்படுத்தி அபாரமான சிக்சர் பறக்க விட்ட ரோகித் சர்மா உலகிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஷாஹீன் அப்ரிடிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் எதிராக முதல் ஓவரில் சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனை படைத்தார். ஏனெனில் முதல் ஓவரில் புதிய பந்தை ஸ்விங் செய்து தெறிக்க விடும் பவுலராக அறியப்படும் அவர் இதற்கு முன் பல போட்டிகளில் முதல் ஓவரிலேயே கொத்து கொத்தாக விக்கெட்டுகளை எடுத்துள்ளதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதனால் இதுவரை தம்முடைய கேரியரில் முதல் ஓவரில் 156 பந்துகளை வீசியுள்ள ஷாஹீன் அப்ரிடி முதல் முறையாக இப்போது தான் சிக்ஸர் கொடுத்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் இதற்கு முன் 17 பவுண்டரிகள் மட்டுமே கொடுத்திருந்த அவருக்கு எதிராக முதல் முறையாக இப்போது தான் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்து பதிலடி கொடுத்துள்ளார்.
Sublime 6️⃣
A majestic flick & @ImRo45 deposits one over the ropes!
Authoritative way to get off the mark!Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvPAK #Cricket pic.twitter.com/px5RgEIyZd
— Star Sports (@StarSportsIndia) September 10, 2023
அவரைப் பார்த்து மறுபுறம் சுப்மன் கில்லும் தில்லாக பேட்டிங் செய்வதால் சற்று முன் வரை இந்தியா 10 ஓவர்களில் 61/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா 18* கில் 41* ரன்கள் எடுத்து பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடும் வேட்டையை துவங்கியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா 300 ரன்கள் அடிக்குமா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.