காயத்துடன் தைரியமாக இறுதிவரை போராடிய ரோஹித் சர்மா – 2 புதிய வரலாற்று சாதனைகள் படைத்து அசத்தல்

Rohit Sharma
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா டிசம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற நிச்சயம் வென்றாக வேண்டிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 69/6 என தடுமாறினாலும் முகமதுல்லா 77 ரன்களும், மெஹதி ஹசன் சதமடித்து 100* ரன்களும் குவித்ததால் 50 ஓவர்களில் 271/7 ரன்கள் எடுத்து மிரட்டியது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி சொற்ப ரன்களில் பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 65/4 என தடுமாறிய இந்தியாவை 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதனால் வேறு வழியின்றி விரலில் கட்டு போட்டுக்கொண்டு வலியுடன் களமிறங்கிய ரோகித் சர்மா முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடிய போதிலும் ஷார்துல் தாகூர், தீபக் சஹர் என டெயில் எண்டர்கள் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

கர்ஜித்த ஹிட்மேன்:
அதிலும் குறிப்பாக 48வது ஓவரை முழுமையாக எதிர்கொண்ட முகமது சிராஜ் ஸ்ட்ரைக் மாற்றாமல் அடுத்த ஓவரில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் ரோகித் சர்மா அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தபிஷூர் ரகுமான் வீசிய அந்த ஓவரில் 0, 4, 4, 0, 6, 0 என 15 ரன்கள் தெறிக்க விட்டு வங்கதேசத்துக்கு பயத்தை காட்டிய ரோகித் சர்மா கடைசி பந்தில் சிக்சர் அடிக்க தவறியதால் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வங்கதேசம் கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே வலுவான அணி என்பதை நிரூபித்தது.

இருப்பினும் சமீப காலங்களாகவே சுமாரான பார்மில் இருந்தாலும் ரத்தம் வரும் அளவுக்கு காயத்தை சந்தித்தாலும் இந்தியாவுக்காக தோல்வியை தவிர்க்க களமிறங்கியே தீர வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது தைரியமாக வந்து ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் வலியுடன் 3 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்டு 28 பந்துகளில் 51* ரன்களை 182.14 என்று அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா உண்மையாகவே காயம் பட்ட சிங்கத்தை போல கர்ஜித்தார் என்றே கூறலாம்.

- Advertisement -

அதனால் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளி வரும் அவர் இப்போட்டியில் அடித்த 5 சிக்ஸர்கள் உட்பட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து 500 சிக்ஸர்களை அடித்த 2வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் முதல் ஆசிய வீரர் என்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளார்.

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் முதல் வீரராக 551 இன்னிங்ஸ்சில் 553 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பின் 445 இன்னிங்ஸ்சில் 502 சிக்ஸர்களை விளாசி ரோகித் சர்மா இந்த சாதனை படைத்துள்ளார். 3வது இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திரம் சாகித் அப்ரிடி 476 சிக்ஸர்களுடன் உள்ளார். அத்துடன் 9வது இடத்தில் களமிறங்கி 5 சிக்ஸர்களை அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜஹிர் கானின் 22 வருட சாதனையையும் உடைத்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : IND vs BAN : நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் வெறும் 3 ஓவர்களை மட்டுமே வீசியது ஏன்? – காரணம் இதோ

அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 5, வங்கதேசத்துக்கு எதிராக, 2022
2. ஜாகிர் கான் : 4, ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2000
3. ஜவகர் ஸ்ரீநாத் : 3, பாகிஸ்தானுக்கு எதிராக, 1998
4. ஹர்பஜன் சிங் : 3, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2001

Advertisement