தோனி கண்டெடுத்த முத்தாக 15 வருடத்தை கடந்த ஹிட்மேன், அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய வரலாறு இதோ

Rohith
- Advertisement -

இந்தியாவின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்து இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் அற்புதமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றிகளை தேடி கொடுத்ததால் ரசிகர்களால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படுகிறார். 2011 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த அவர் “சூரியன் நாளை உதிக்கும்” என்று டுவிட்டை போட்டதுடன் அதற்காக கடினமாக உழைத்து இன்று 3 வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 2008 – 2012 வரை ஜாம்பவான் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றதும் அடுத்த 7 வருடங்களுக்குள் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்த மகத்தான பயணத்தில் தமக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள அவருக்கு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அம்பியாக ரோஹித்:
இந்த சமயத்தில் ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்டு ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு உள்ளான ரோகித் சர்மா இன்று சிக்சர்களை அசால்டாக பறக்கவிடும் அதிரடி பேட்ஸ்மேனாக ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுத்த வரலாற்றை புரட்டிப் பார்ப்போம். நாக்பூரில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பைக்காக அசத்தியதால் கடந்த 2007இல் இதே ஜூன் 23-ஆம் தேதியன்று அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா அதே வருடத்தில் டி20 அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அத்துடன் 2007இல் எம்எஸ் தோனி தலைமையில் வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

அந்த காலகட்டங்களில் சுமாராகவே செயல்பட்ட அவரின் திறமை உலக கோப்பை பைனலில் கடைசி நேரத்தில் அடித்த 30* (16) ரன்கள் உட்பட தொடர்ச்சியாக அல்லாமல் அவ்வப்போது மட்டுமே வெளிப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் மிடில் ஆர்டரில் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் ரொம்பவே தடுமாறிய அவர் அதன் காரணமாகவே 2011 உலகக்கோப்பை உட்பட இந்திய அணியில் தொடர்ச்சியான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தார். சொல்லப்போனால் 2007 முதல் 2012 வரை மிடில் ஆர்டரில் களமிறங்கி 81 ஒருநாள் போட்டிகளில் 1978 ரன்களை 30.43 என்ற மோசமான சராசரியில் 77.93 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் 12 அரை சதங்களையும் 2 சதங்களை மட்டுமே அடித்திருந்தார்.

- Advertisement -

தோனியின் முடிவு:
மேற்குறிப்பிட்ட புள்ளி விவரமே அவரை நிரந்தரமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்ற ஒரு கேப்டனுக்கு போதுமானதாகும். ஆனால் 2007 – 2012 வரை தனது தலைமையில் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய ரோகித் சர்மாவின் அவ்வப்போது வெளிப்பட்ட திறமைகளை தொடர்ந்து கவனித்து வந்த கேப்டன் எம்எஸ் தோனி 2011 உலக கோப்பைக்கு பின் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் வகையில் விரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் போன்ற மூத்த வீரர்களுக்கு பதில் இவரை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்தார். 2013இல் முதல்முறையாக தொடக்க வீரராக வாய்ப்பளித்த தோனி பின்னர் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் நிரந்தரமாக ஷிகர் தவானுடன் அவரை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டார்.

அந்த பொன்னான வாய்ப்பில் அதுவரை மிடில் ஆர்டரில் அம்பியாக தடுமாறிக் கொண்டிருந்த ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கியதும் அந்நியனை போல் விஸ்வரூபம் எடுத்து எதிரணிகளை பந்தாட துவங்கினார். அந்த வருடமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த அவர் 2014இல் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து யாராலும் உடைக்க முடியாத பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார். அதோடு நிற்காமல் 2018இல் மீண்டும் இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதமடித்த அவர் 3 இரட்டை சதங்களை அசால்ட்டாக தெறிக்கவிட்டு மெகா உலகசதானை படைத்தார். மேலும் 2019 உலக கோப்பையில் 5 சதங்களை அடித்து ஒரு உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் உலக சாதனை படைத்தார்.

மொத்தத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி 2013 – 2022* வரை 142 போட்டிகளில் 7305 ரன்களை 57.97 என்ற அற்புதமான சராசரியில் 92.58 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி வரும் அவர் 32 அரை சதங்களையும் 27 சதங்களை அடித்து கடந்த 10 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டை ஆட்சி செய்யும் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். தம்மை தோனி ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியதே இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணம் என்று நன்றி மறவாமல் 2017இல் தெரிவித்த ஒரு பேட்டியில் ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு.

“ஒருநாள் கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் முடிவு எனது கேரியரை மாற்றியதாக நம்புகிறேன். அதை எம்எஸ் தோனி தான் எடுத்தார். அதன்பின் நல்ல பேட்ஸ்மேனாக வந்துள்ளதாக உணர்கிறேன். சொல்லப்போனால் அது என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டு நல்லபடியாக விளையாட உதவுகிறது. இந்த சமயத்தில் இதர இந்திய கேப்டன்களை அவமரியாதை செய்ய விரும்பாத நான் தோனியின் தலைமையில் விளையாட ஆசீர்வதிக்கப் பட்டவனாக கருதுகிறேன். அழுத்தமான சூழ்நிலையிலும் கூலாக இருக்கும் அவரைப் போன்று யாரும் கிடையாது” என்று பாராட்டியிருந்தார்.

Advertisement