ரிஷப் பண்ட திட்டாதீங்க, தவறு சகஜம் தானே – விமர்சன நேரத்தில் ரோஹித் சர்மா, பாண்டிங் கூறிய ஆதரவு இதோ

DC vs MI
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-வது லீக் போட்டியில் வாழ்வா – சாவா என்ற நிலைமையில் மும்பையை எதிர்கொண்ட டெல்லி 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 159/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 39 (32) ரன்களும் ரோவ்மன் போவல் 43 (34) ரன்களும் அக்ஷர் பட்டேல் 19* (10) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Rovman Powell Jasprit Bumrah

அதை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் இஷான் கிசான் 48 (35) ரன்களும் தேவாலட் ப்ரேவிஸ் 37 (33) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டிம் டேவிட் 34 (11) திலக் வர்மா 21 (17) ரமந்தீப் சிங் 13* (6) என அதிரடியான ரன்களை எடுத்து 19.1 ஓவர்களில் 160/5 ரன்களை எட்ட வைத்து தங்களது அணியை வெற்றிபெறச் செய்தனர்.

- Advertisement -

சொதப்பிய பண்ட்:
அதனால் தனது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியடைந்தாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்த மும்பை முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்துடன் வெளியேறியது. இருப்பினும் டெல்லியை தோற்கடித்து 5-வது இடத்தில் தத்தளித்த பெங்களூருவை 4-வது இடத்திற்கு முன்னேற்றி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல மாபெரும் உதவி செய்ததால் மும்பையை விராட் கோலி உட்பட அனைத்து பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இப்போட்டியில் 95/3 என்ற நிலைமையில் களமிறங்கிய டிம் டேவிட் 0 ரன்களில் இருந்தபோது ஷார்துல் தாக்கூர் வீசிய பந்தில் எட்ஜ் வாங்கி ரிஷப் பண்ட் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை ரிவ்யூ எடுக்காமல் கோட்டைவிட்ட ரிசப் பண்ட் அத்தோடு வெற்றியையும் மும்பைக்கு தாரை வார்த்தார். அதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற டெல்லியின் கனவை தூளாக்கிய அவரை பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

திட்ட வேண்டாம்:
இருப்பினும் களத்தில் யாருமே வேண்டுமென்று தவறு செய்ய மாட்டார்கள் என தெரிவித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஒரு தரமான கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. கடந்த சீசன்களில் அவர் எப்படி தனது அணியை வழி நடத்தினார் என்பதை நாம் பார்த்தோம். சில நேரங்களில் சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது, அதுதான் நடைபெற்றது. கடந்த காலங்களில் நானும் இது போன்ற கடினமான தருணங்களை சந்தித்துள்ளேன். அதைத்தான் தற்போது அவரிடமும் தெரிவித்தேன். இது போன்ற தருணங்களில் களத்தில் நடைபெறுவது சாதாரணமாக சில நேரங்களில் அது உங்களுக்கு சாதகமாக அமையாது. எனவே அதில் எந்த தவறும் கிடையாது” என்று கூறினார்.

mivsdc

அவர் கூறுவதுபோல போட்டியில் தவறுகளும் தோல்விகள் சகஜம் என்ற நிலையில் தற்போது இளம் வீரராக இருக்கும் ரிஷப் பண்ட் இதுபோன்ற தவறுகளிலிருந்து நிச்சயமாக பாடங்களை கற்றுக் கொண்டு வரும் காலங்களில் தரமான கேப்டனாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எடுத்துக்காட்டாக ஆரம்ப கட்டத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய அவர் தற்போது அதில் நல்ல முன்னேற்றம் கண்டு தோனிக்கு அடுத்து இந்தியாவின் நிரந்தர விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.

- Advertisement -

திரும்பி வருவார்:
“இந்த தோல்விகளில் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவரிடம் நல்ல நுணுக்கங்கள் உள்ளன, விக்கெட் கீப்பராக பின்னாடி நின்று அவர் போட்டியை நன்றாக கணிக்கிறார். ஐபிஎல் மிகவும் அழுத்தம் நிறைந்த தொடர் என்பதால் ஒரு சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதற்காக தன்னம்பிக்கை இழந்து உங்கள் மீது சந்தேகப்படக் கூடாது என்பதே முக்கியம். இதுபற்றி அவரிடம் நானும் பேசினேன். நிச்சயமாக அடுத்த சீசனில் அவர் வலுவாக திரும்பி வருவார்” என்று இதுபற்றி ரோகித் சர்மா மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு – முழுலிஸ்ட் இதோ

இது பற்றி ஆஸ்திரேலிய ஜாம்பவான் மற்றும் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இளமையானவர் நிறைய கற்றுக் கொண்டு வருகிறார். ஐபிஎல் போன்ற கடினமான டி20 தொடரில் கேப்டனாக இருப்பது சவாலானதாகும். அவருக்கு நிச்சயமாக என்னுடைய முழு ஆதரவு உண்டு. மேலும் தோல்விக்காக அவரை மட்டும் குறை கூற முடியாது. எங்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களும் ரன்கள் எடுக்க தவறியதால் 40/4 என தடுமாறினோம். இது போன்ற முக்கிய போட்டியில் அதுபோன்ற தொடக்கம் வெற்றியை கொடுக்காது” என்று பேசினார்.

Advertisement