IPL 2023 : சொன்னதை செய்து காட்டி மும்பையை காப்பாற்றிய ஹிட்மேன் ரோஹித் சர்மா – வார்னரை மிஞ்சி சேவாக், கெயில் சாதனை சமன்

Rohit Sharma
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற 16வது போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 19.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிதிவி ஷா 15 (10), மணிஷ் பாண்டே 26 (18), யாஷ் துள் 2 (4), ரோவ்மன் போவல் 4 (4), லலித் யாதவ் 2 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய அணியை நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் அதிரடியாக 4 பவுண்டரி 5 சிக்சருடன் 54 (25) ரன்கள் குவித்து காப்பாற்றினார்.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி 19 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 6 பவுண்டரியுடன் 51 (47) ரன்கள் எடுத்து பின்னடைவை கொடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெரன்டாஃப் மற்றும் பியூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய மும்பைக்கு இம்முறை ஆரம்பத்திலேயே அதிரடியாக செயல்பட்டு 71 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் இஷான் கிசான் 31 (26) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

சொன்னதை செய்த ஹிட்மேன்:
மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ரோகித் சர்மா 2 வருடங்கள் 808 நாட்கள் 24 இன்னிங்ஸ் கழித்து முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அரை சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டார். கடைசியாக கடந்த 2021 சீசனில் அரை சதமடித்திருந்த அவர் கடந்த வருடம் முதல் முறையாக ஒருமுறை கூட 50 ரன்கள் தொடாமல் சுமாராக செயல்பட்டது மும்பைக்கு தொடர் தோல்விகளை பரிசளித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை கொடுத்தது. அதனால் சந்தித்து வந்த விமர்சனங்களை இப்போட்டியில் உடைத்த அவருடன் 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய திலக் வர்மா 1 பவுண்டரின் 4 சிக்ஸருடன் 41 (29) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அந்த நிலைமையில் வந்த சூரியகுமார் யாதவ் மீண்டும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்த ஓவரிலேயே ரோகித் சர்மாவும் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 65 (45) ரன்களில் அவுட்டானதால் கேள்விக்குறியான மும்பையின் வெற்றியை கேமரூன் கிரீன் 17* (8) ரன்களும் டிம் டேவிட் 13* (11) ரன்களும் எடுத்து கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்க தவறிய டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 4வது படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் எளிதாக கிடைக்க வேண்டிய வெற்றியை கடைசி பந்து வரை சென்று போராடிய மும்பைக்கு உண்மையாகவே ரோகித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடாமல் போயிருந்தால் தோல்வியை கிடைத்திருக்கும் என்றே சொல்லலாம். அதை விட இந்த சீசனின் முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த மும்பை வழக்கமான கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

அப்போது யாரையும் குறை சொல்லாத ரோகித் சர்மா சென்னைக்கு எதிரான 2வது தோல்விக்கு பின் வெற்றிப் பாதைக்கு திரும்ப சீனியர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் குறிப்பாக தாம் முதலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தம்மைத் தாமை விமர்சித்தார். அப்படி கடந்த போட்டியில் சொன்னதை இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வைத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற 3வது வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஏபி டீ வில்லியர்ஸ் : 25
2. கிறிஸ் கெய்ல் : 23
3. ரோஹித் சர்மா : 19*
4. டேவிட் வார்னர் : 18
5. எம் எஸ் தோனி : 17

இதையும் படிங்க: CSK : இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் இந்த 3 பேர் விளையாட வாய்ப்பில்லை – ரவீந்திர ஜடேஜா பேட்டி

அத்துடன் முகேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. வீரேந்திர சேவாக்/கிறிஸ் கெயில்/ரோஹித் சர்மா : தலா 12 சிக்ஸர்கள்

Advertisement