- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs RSA : எவ்ளோ பாத்தாச்சு. அதான் 18 ஆவது ஓவரை அஷ்வினிடம் கொடுத்தேன் – ரோஹித் கொடுத்த விளக்கம்

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது 4 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களின் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தது.

அப்போது 18 வது ஓவரை வீச கேப்டன் ரோகித் சர்மா அஷ்வினை அழைத்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் மில்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை பரக்கவிட்டு முதல் மூன்று பந்துகளிலேயே 13 ரன்கள் குவித்து விட்டார். மேலும் அதே ஓவரில் ஒரு விக்கெட் விழுந்து இருந்தாலும் அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் கிடைத்தது. இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணி எளிதில் வெற்றி பெற்றது. இப்படி அஷ்வின் வீசிய அந்த 18-வது ஓவர் போட்டியின் திருப்புமுனையாக மாறிய வேளையில் கடைசி கட்டத்தில் அந்த பதினெட்டாவது ஓவரை ரோகித் சர்மா அஸ்வினிடம் கொடுக்க என்ன காரணம் என்பது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ஏற்கனவே இந்த தொடரில் மட்டுமின்றி பல்வேறு போட்டிகளிலும் கடைசி ஓவரை ஸ்பின்னர் வீசினால் என்ன நடக்கும் என்பதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

எனவே அது போன்ற ஒரு கடினமான சூழ்நிலையை நாம் இந்த போட்டியில் ஏற்படுத்திக் கூடாது என்பதன் காரணமாக முன்கூட்டியே அஷ்வினை 18-வது ஓவரை வீச அழைத்தேன். மேலும் அந்த ஓவரை அஷ்வின் சிறப்பாக வீசி முடித்து விட்டால் அதன் பிறகு வரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச அது சரியான தருணமாக அமையும் என்கிற காரணத்தினால் நான் அஷ்வினை அந்த கட்டத்தில் பயன்படுத்தினேன்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச பாகிஸ்தான் தான் காரணம் – ஆட்டநாயகன் லுங்கி நிகிடி பேட்டி

ஒருவேளை அந்த ஓவரின் ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட் விழுந்து இருந்தால் புதிதாக வரும் பேட்டர்களுக்கு அஷ்வினின் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். ஆனால் மில்லர் அந்த ஓவரில் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை அப்படியே திருப்பி விட்டார் என ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by