முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சாதனையா! 65 ஆண்டுகளுக்கு பின் கேப்டன் ரோஹித் படைத்த – அரிதான சாதனை

INDvsSL
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மார்ச் 4ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2011 முதல் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றி வரும் அவருக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு தொப்பி பரிசளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

Kohli 2

- Advertisement -

இதை அடுத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற பெரிய ஸ்கோர் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கடைசி வரை அவுட் ஆகாமல் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடிய ரவீந்திர ஜடேஜா சதமடித்து 175* ரன்கள் குவித்தார். அவருடன் ரிஷப் பண்ட் அதிரடியாக 96 ரன்கள் விளாசினார்.

இந்தியா வெற்றி:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளிகளில் தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் கருணரத்னே, அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் பெரிய ரன்கள் அடிக்காமல் ஏமாற்றியதால் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி வெறும் 174 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் பெற்றது.

Jadeja

அந்த அணிக்கு அதிகபட்சமாக முதல் இன்னிங்சில் நிஷாங்கா 61* ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தி 5 விக்கெட்டுகள் சாய்க்க அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சிலாவது இலங்கை வீரர்கள் தோல்வியை தவிர்க்க போராடுவார்களா என எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்களுக்கு இறுதிவரை ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் 2வது இன்னிங்ஸிலும் அதேபோல பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி வெறும் 178 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா 51* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா மாஸ் வெற்றி:
இந்தியா சார்பில் மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதன் வாயிலாக இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்றுள்ளது.

Jayant

இந்த இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வெற்றி என்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பதிவு செய்யும் 5வது மிகப்பெரிய வெற்றியாகும். 175* ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்து ஒரு ஆல்ரவுண்டராக செயல்பட்டு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவீந்திர ஜடேஜா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

65 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் சாதனை:
முன்னதாக இந்த போட்டிக்கு முன்பாக சமீபத்தில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென பதவி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். அவர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பயணத்தை துவங்கியுள்ள இந்தியா முதல் போட்டியிலேயே மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.

Rohith

இதன் வாயிலாக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த 2வது இந்திய கேப்டன் என்ற அரிதான சாதனையை 65 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா படைத்துள்ளார். ஆம் கடந்த 1955/56இல் அப்போதைய இந்திய கேப்டனாக பொறுப்பேற்ற பாலி உம்ரிகர் நியூசிலாந்துக்கு எதிராக மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த தனது முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : முதல் போட்டி சிஎஸ்கே – கேகேஆர் மோதல், அதிகாரபூர்வமாக வெளியான முழு – அட்டவணை இதோ

அதன்பின் கபில்தேவ், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்த போதிலும் இது போல முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது கிடையாது. தற்போது 65 ஆண்டுகள் கழித்துதான் ரோகித் சர்மா அது போன்ற ஒரு இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த 2வது கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

Advertisement