
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு இந்த ஆண்டு அவரது வாழ்வில் சிறப்பான காலமாக மாறியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் ரோகித் சர்மா அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறார்.
அந்தவகையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும், சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெல்லும் முனைப்புடன் தற்போது தயாராகி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அவர் கூறியது போன்றே ரோகித் சர்மா இந்திய அணியுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா பயணிக்காமல் இருந்தார். இதனால் அவரது இந்த முடிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. அதோடு ஒரு நல்ல விஷயத்தை ரோகித் சர்மா விரைவில் அறிவிக்கப்போகிறார் என்றும் பல செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் தற்போது எதிர்பார்த்தபடியே ரோகித் சர்மா ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரோஹித் சர்மா இரண்டாவதாக ஆண் குழந்தையை வரவேற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்றுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதி திருமணம் செய்து கொண்டிருந்த வேளையில் 2018-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமைரா என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : ஏகப்பட்ட சிந்தனை இருந்தது.. ஆனாலும் இதுதான் என் வேலை.. கடைசி போட்டியில் அடித்த சதம் குறித்து – சஞ்சு சாம்சன் பேச்சு
இந்நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ள ரோஹித் சர்மா அந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள வேளையில் “குட்டி ஹிட்மேன்” வருகையை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.