
அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக ஒரு மாதத்திற்கு இந்திய அணிக்கு எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை என்பதால் இந்திய வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாட இருக்கின்றனர்.
இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த அட்டவணையின் படி முதலாவதாக வங்கதேச அணிக்கு எதிராகவும், அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
இதன் காரணமாக தற்போது டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அனைவரையும் தயார் படுத்த கம்பீர் சில முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடப்போகும் அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என்று ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், அஸ்வின், சுப்பன் கில், ரிஷப் பண்ட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், குல்தீப் யாதவ் என அனைவருமே துலீப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு மட்டுமே ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி : விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால் தங்களது உடற்தகுதியை சரியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக துலீப் டிராபி தொடரில் விளையாட முடியாது என்றும் தங்களுக்கு ஓய்வளிக்குமாறும் பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அனுபவ வீரர்களான அவர்களது அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகமும் அவர்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பும்ரா கூட அவரும் சேர்ந்து பந்து வீசுனா எந்த பேட்ஸ்மேனாலும் ஒன்னும் பண்ண முடியாது – முன்னாள் பவுலிங் கோச் பேட்டி
இதன் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துலீப் டிராபி தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. புதிய பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் அனுபவ வீரர்களாக இருந்தாலும் உள்ளூர் தொடரில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வேளையில் அவரது அந்த கருத்தையும் மீறி தற்போது ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ-யிடம் முறையிட்டு ஓய்வையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.