
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த பல ஆண்டுகளாகவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை காயம் காரணமாக அவரால் கடந்த ஏழு ஆண்டுகளாக இடம்பெற முடியாமல் இருந்து வருகிறது. கடந்து 2017-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் ஒரு ஆண்டு மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
அந்தவகையில் டெஸ்ட் போட்டிகளில் 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் என 532 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் எந்த அளவு அதிரடி காண்பிக்கிறாரோ அதேபோன்று பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஹார்டிக் பாண்டியா மீண்டும் திரும்பினால் இந்திய அணி மேலும் பலமான அணியாக மாறும் என்றும் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றவும் ஒரு வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பி ஏழாவது இடத்தில் விளையாடினால் அது இந்திய அணிக்கு ஒரு நல்ல முடிவாக அமையும். ஹார்டிக் பாண்டியா விடயத்தில் பி.சி.சி.ஐ அவரை மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைக்க வேண்டும்.
அப்படி அழைத்தால் நிச்சயம் அவர் வேண்டாம் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தற்போது விளையாடி வரும் நிதீஷ் ரெட்டி ஒரு இன்னிங்சிற்கு 12-15 ஓவர்கள் வரை தான் பந்துவீசுகிறார்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை எதிர்வருவதால் அதை கருத்தில் கொண்டு ஜஸ்ப்ரீத் பும்ரா எடுத்துள்ள முடிவு – விவரம் இதோ
அந்த வகையில் பார்க்கையில் தற்போது ஹார்டிக் பாண்டியா இருக்கும் உடற்தகுதிக்கு நிச்சயம் அவரால் அந்த 15 ஓவர்களை வீசிவிட்டு பேட்டிங் செய்ய முடியும். அப்படி அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பினால் நிச்சயம் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.