ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்களை துரத்த முடியாமல் சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து சென்னை அவமானத் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்ந்தது.
அதன் காரணமாக எம்எஸ் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஏனெனில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு பின் 9வது இடத்தில் அவர் களமிறங்கியது சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமானது. அதே போல ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோனி கொஞ்சம் முன்பாக பேட்டிங் செய்ய வந்திருந்தால் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் பேசுகின்றனர்.
விட்டா 9க்கு கிழே வருவாரு:
இந்நிலையில் இப்படியே விட்டால் தோனி 9க்கு கீழே டெயில் எண்டர்கள் களமிறங்கக்கூடிய 10, 11வது இடத்தில் பேட்டிங் செய்வார் போல என்று முன்னாள் ராபின் உத்தப்பா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வெற்றியை விட தோனி வேறு எதை முக்கியமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்றும் அவர் கேள்வி அனுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் உத்தப்பா பேசியது பின்வருமாறு.
“விட்டால் தோனி 9வது இடத்திற்கு கீழே கூட பேட்டிங் செய்வார். 9க்கும் 10, 11க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. குழப்பம் என்பது மிகவும் பலவீனமான சொல். அவருக்கு என்ன ஆயிற்று? என்ன சிந்திக்கிறார்? ஏனெனில் அவர் பேட்டிங் செய்ய வருவதற்குள் வெற்றி உறுதியாக பறிபோய் விடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்”
சென்னைக்கு நல்லதல்ல:
“பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்த நேரத்திலேயே உங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பது தெரியும். அதுபோன்ற சூழ்நிலையில் குறைந்தபட்சம் ரன்ரேட்டை காப்பாற்ற விளையாடுவதே சிறந்த வாய்ப்பாகும். ஐபிஎல் தொடரின் கடைசிப் பகுதிகளில் ரன்ரேட் முக்கியமாக இருக்கும் அல்லவா? பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் 13, 14வது ஓவரிலேயே தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்தது”
இதையும் படிங்க: இது மட்டும் இல்லனா ரோஹித் மும்பை டீம்ல இருக்க தகுதியில்ல.. கேப்டனா இல்லாதது ஆச்சர்யம்.. வாகன் பேட்டி
“அதனால் தோனி 8வது இடத்திற்கு கீழே பேட்டிங் செய்ய வாய்ப்பே இல்லை என்று நான் நினைத்தேன். மற்ற வீரர்கள் பணிச்சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுவதால் அங்கே பேட்டிங் செய்கிறீர்கள். ஆனால் வெற்றிக்கு அழுத்தம் வரும் போதும் அவற்றைத் தாண்டி தோனி வரவில்லை என்று யோசிக்கிறீர்கள். இப்படியே செல்வது சென்னை அணிக்கு நல்லதல்ல” என்று கூறினார்.



