ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை அணி ஒரு வழியாக தங்களது முதல் வெற்றியைப் பெற்று அசத்தியது. மார்ச் 31ஆம் தேதி சொந்த மண்ணில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 தோல்விகளுக்குப் பின் மும்பை 3வது போட்டியில் வெற்றியைப் பெற்றது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 117 ரன்களை சேசிங் செய்கையில் 13 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தார். சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் தடுமாறி வரும் அவர் இந்த வருடம் 0, 8, 13 என மொத்தமாக 21 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெயர் மட்டும் இல்லாமல் போனால் ஒரு சாதாரண வீரராக ரோஹித் சர்மா மும்பை அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் வாகன் விமர்சித்துள்ளார்.
வீரராக தகுதியில்ல:
அதே சமயம் தாம் ரோகித் சர்மாவை மும்பை அணியிலிருந்து நீக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். மாறாக இந்தியாவுக்கு கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் மும்பை கேப்டனாக இல்லாதது ஆச்சரியமாக இருப்பதாகவும் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது ரோகித் சர்மாவை கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்”
“அது போன்ற சூழ்நிலையில் அவருடைய புள்ளிவிவரங்கள் சராசரிக்கு நிகராக இல்லை. அதனால் உங்களுடைய பெயர் ரோஹித் சர்மா என்று இல்லாமல் போனால் ஏதோ ஒரு கட்டத்தில் மும்பை அணியில் உங்களது இடத்தை இழப்பீர்கள். இந்த புள்ளிவிவரங்கள் ரோகித் சர்மா எனும் வீரரின் திறமைக்கு தகுந்தார் போல் இல்லை”
கேப்டனாக தகுதியுடையவர்:
“அவருக்கு ரன்கள் தேவை. இருப்பினும் கேப்டனாக அவர் தனது அறிவை அணிக்கு கொடுக்கிறார். எனவே அவரை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன். நல்ல துவக்கத்தை மட்டும் கொடுங்கள். ஏனெனில் அது தான் மும்பை அணியை ஒரு சீனியராக நீங்கள் சரியான வழியில் அழைத்துச் செல்வதற்கான செயலாகும். ரோகித் சர்மாவின் புள்ளிவிவரங்கள் தான் உண்மையான பிரச்சனையாகும்”
இதையும் படிங்க: தோனி, ரோஹித், விராட் ஆகிய ஜாம்பவான்களோடு 4 ஆவது வீரராக வரலாற்று பட்டியலில் இணைந்த – மனிஷ் பாண்டே
“சீனியராக நீங்கள் அசத்தாமல் போனால் இளம் வீரர்கள் அசத்துவது கடினம். அதே சமயம் இந்தியாவுக்கு ஒரு அற்புதமான கேப்டனாக வேலை செய்யும் ரோஹித் சர்மா மும்பையின் கேப்டனாக செயல்பட போதுமானவராக இல்லையா? தேசத்தின் கேப்டனாக இருக்கும் அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக எவ்வாறு இல்லாமல் போக முடியும்? என்பது எனது தலையில் குழப்பத்தை உண்டாக்குகிறது” என்று கூறினார்.



