எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தின் போது 10 அணிகளும் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி தங்களது அணியை மேலும் பலப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் யார்? : ராபின் உத்தப்பா
இந்த மினி ஏலத்தின் போது பல்வேறு வீரர்களின் அணிமாற்றம் நிகழ்ந்துள்ளதால் பல்வேறு அணிகளிலும் பல மாற்றங்கள் நிகழக் காத்திருக்கின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் மாற்றமும் நடைபெற இருக்கிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை அணிக்கு வந்துவிட்டார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 2026 ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் அங்கு இருக்கும் வேளையில் ரியான் பராக் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே மட்டும்தான் கேப்டன் போட்டி இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியை பெறுவதற்கு இன்னும் நீண்ட காலமாகும். அதனால் அவர் காத்திருக்க வேண்டியது அவசியம். தற்போதைக்கு என்னை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் பதவிக்கு ரியான் பராக் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஏற்கனவே ரவிந்திர ஜடேஜா தோனியின் தலைமையின் கீழ் பல ஆண்டுகால விளையாடிய அனுபவம் உடையவர். அதோடு அவரிடமிருந்து கேப்டன்சி திறனையும் நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்பதனால் அவர் முக்கிய போட்டியாக இருப்பார்.
இதையும் படிங்க : 2025-ல் சிறப்பாக விளையாடிய 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ரியான் பராக் ஏற்கனவே இந்த ஆண்டு சில போட்டிகளில் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளதால் அவரும் கேப்டன்சி போட்டியில் இருப்பார் என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு யாரும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவு என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.



