இந்திய கிரிக்கெட் அணியானது நடப்பு 2025-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று கடைசியாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் ஒருநாள் மற்றும் டி20 தொடரையும் கைப்பற்றியிருந்தது.
2025-ன் பெஸ்ட் 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இரண்டு வீரர்கள் யார்? என்பது குறித்த தனது கருத்தினை முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அபிஷேக் சர்மா தான் இந்த ஆண்டு சிறந்த வீரர்களாக திகழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்கிறேன். ஏனெனில் இந்த ஆண்டு முழுவதுமே அவர் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக நீடிப்பார். தற்போது வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் 1 டி20 பவுலராக மாறியுள்ளார். எந்த அளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஒவ்வொரு படியாக தன்னை உயர்த்திக்கொண்ட வருண் சக்கரவர்த்தி இன்று நம்பர் ஒன் டி20 பவுலராக மாறுவதற்கு நிறைய உழைப்பை போட்டுள்ளார்.
அதேபோன்று அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேனாக மாறுவதற்கான அத்தனை வாய்ப்பும் அவருக்கு நிறையவே இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு – விவரம் இதோ
டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது சிறப்பான அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பன்மடங்கு பலத்தை சேர்த்துள்ளது என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



