சர்வதேச கிரிக்கெட்டில் நான் வீணாய் போனதற்கு இதுவே காரணம் – முதன்முறையாக வாய் திறந்த உத்தப்பா

Uthappa
- Advertisement -

எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த பல இந்திய கிரிக்கெட் வீரர்கள், வந்த வேகத்திலேயே இந்திய அணியில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை இப்படி அமைந்து போக, அதில் சில வீரர்கள் மட்டும் இந்திய அணியில் எப்படியாவது மீண்டும் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் காட்டுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாமல் போகவே, அவர்கள் கடைசி வரை தங்களது திறமைகளை உள்ளூர் போட்டிகளில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களில் ராபின் உத்தப்பா மிக முக்கியமானவர். ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ராபின் உத்தப்பா, தான் ஏன் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

uthappa 2

- Advertisement -

2006ஆம் ஆண்டு இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறிமுகமான உத்தப்பா, அந்த ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 96 பந்துகளில் 86 ரன்கள் அடித்து, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். தனது முதல் போட்டியிலேயே ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பாவிற்கு, இந்திய அணியில் தொடர்ந்து ஓப்பனிங் பேட்மேனாகவே களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டதா என்று கேட்டால் இல்லையென்ற பதிலைத்தான் சொல்ல முடியும். இந்திய அணிக்காக 46 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், இந்திய அணியில் தன்னுடைய பேட்டிங் வரிசை குறித்து பேசியபோது,

இந்திய அணிக்காக நான் விளையாடிய 46 போட்டிகளிலும் நான் ஒரே பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படவில்லை. சில போட்டிகளில் ஓப்பனிங் ஆடுவேன், சில போட்டிகளில் எந்த இடத்தில் நான் விளையாடுவேன் என்பது எனக்கு தெரியாது. சரியாக செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு மூன்று போட்டிகளுக்கும் ஒரு முறை என்னுடைய பேட்டிங் வரிசை மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருவேளை நான் விளையாடிய அந்த 46 போட்டிகளிலும் எனக்கு நிலையான ஒரு இடத்தை வழங்கியிருந்தால், நான் இந்தியாவிற்காக 146 போட்டிகள் அல்லது 246 போட்டிகளிலாவது விளையாடி இருப்பேன் என்று அவர் கூறினார். ராபின் உத்தப்பா கூறியது போலவே அவருடைய கிரிக்கெட் பயணத்தில் அவருக்கு நிலையான ஒரு இடம் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான்.

uthappa 1

இந்தியாவிற்காக அவர் விளையாடிய போட்டிகளில், 16 முறை ஓப்பனிங் வரிசையிலும், 7 முறை மூன்றாவது இடத்திலும், 5 முறை ஐந்தாவது இடத்திலும், 8 முறை ஏழாவது இடத்திலும், 6 முறை ஆறாவது இடத்திலும் களமிறக்கப்பட்டிருக்கிறார். அப்பேட்டியில் மேலும் கூறிய அவர், அப்போது அணிக்கு என்ன தேவையோ அதை நான் செய்தேன். ஆனால் பிற்காலத்தில் அதுவே இந்திய அணியில் நான் என்னுடைய இடத்தை இழப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறினார்.

Uthappa

2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் மிக முக்கிய பேடஸ்மேனாக திகழ்ந்த ராபின் உத்தப்பா, 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும், சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர், 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தன் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதுவரை 46 ஒரு நாள் போட்டிகளில் 934 ரன்களும், 13 டி20 போட்டிகளில் 249 ரன்களும் அடித்திருக்கும் அவர், ஐபிஎல் தொடர்களில் 189 போட்டிகளில் 4607 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement