IND vs AUS : டிகே’விடம் ரோஹித் சர்மா கோபத்துடன் நடந்துகொண்டது ஏன்? உண்மை பின்னணியை விளக்கும் முன்னாள் வீரர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அதனால் நம்பர் ஒன் டி20 அணியாக சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இத்தொடரை வென்று தலைநிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா செப்டம்பர் 23ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கும் 2வது போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 209 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அதைவிட சம்பந்தமின்றி உமேஷ் யாதவை கொண்டு வந்தது, மீண்டும் புவனேஸ்வர் குமாரை 19வது ஓவரில் பயன்படுத்தியது போன்ற ரோகித் சர்மாவின் குளறுபடியான கேப்டன்ஷிப் அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக சமீப காலங்களாக போட்டியில் ஏற்படும் பரபரப்பான தருணங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதை வீரர்கள் மீது வெளிப்படுத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மா தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீது கோபத்தை வெளிப்படுத்தியது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. குறிப்பாக உமேஷ் யாதவ் வீசிய 12வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த எட்ஜ்ஜை சரியாக தினேஷ் கார்த்திக் பிடித்தும் நடுவர் அவுட் கொடுக்காததால் ரிவியூ எடுக்கப்பட்டதில் இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைத்தது.

- Advertisement -

உண்மையான காரணம்:
அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் எட்ஜ் கொடுத்த கேட்ச்சை மீண்டும் தினேஷ் கார்த்திக் சரியாக பிடித்தும் நடுவர் அவுட் கொடுக்காததால் எடுக்கப்பட்ட ரிவியூவில் மீண்டும் இந்தியாவுக்கு சாதகமான முடிவு வந்தது. அப்படி ஒரே ஓவரில் அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததால் இதர வீரர்கள் மகிழ்ச்சியை கொண்டாடிய நிலையில் ரோகித் சர்மா மட்டும் தினேஷ் கார்த்திக்கின் தாடையை பிடித்து திட்டுவது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார். அதனால் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அணி வீரர்களிடம் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று ரோஹித்தை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த தருணத்தில் கேட்ச் பிடித்த பின் அவுட் என தெரிந்தும் அதை விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சத்தமாக அப்பீல் செய்யாமல் அமைதியாக நடந்து கொண்டதால் “இந்த வாயைத் திறந்து கொஞ்சம் சத்தமாக அப்பீல் செய்தால் தான் என்ன” என்ற வகையில் ரோகித் சர்மா நடந்து கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா உண்மையான பின்னணியை விளக்கியுள்ளார். பொதுவாக எல்பிடபிள்யூ, கீப்பர் கேட்ச் போன்ற தருணங்கள் விக்கெட் கீப்பருக்குத் தான் சரியாக தெரியும் என்பதால் கேப்டன் உட்பட அணியின் இதர வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து அவுட் கேட்கும் வகையில் அம்பயரிடம் சத்தமாக அப்பீல் செய்வது விக்கெட் கீப்பரின் கடமையாகும்.

- Advertisement -

அதிலும் பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் போன்ற விக்கெட் கீப்பர்கள் அவுட்டே இல்லையென்றாலும் அடிக்கடி அப்பீல் செய்து கடுப்பேற்றும் நிலையில் அவுட் எனத்தெரிந்தும் தினேஷ் கார்த்திக் அந்த முக்கிய நேரத்தில் அமைதி காத்ததே ரோகித் சர்மாவின் அந்த செயலுக்கு காரணம் என்று தெரிவிக்கும் ராபின் உத்தப்பா இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் தினேஷ் கார்த்திக் மிகவும் கூலாக அமைதியாகி விடுகிறார். அதிலும் பேட்ஸ்மேன் அவுட் என தெரிந்து விட்டால் அவர் ரிலாக்ஸ் ஆகி விடுகிறார். அதனால் ரோகித் சர்மா அங்கு சிறந்தவற்றை செய்தார். அதாவது ரோகித் சர்மா அவரிடம் அவுட் என தெரிந்தால் குறைந்தது அப்பீல் செய்யுங்கள் என்று விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்தார்” எனக் கூறினார்.

முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக்கை மீண்டும் நம்பாத ரோகித் சர்மா அவருக்கு பதில் அக்ஷர் பட்டேலை பேட்டிங் செய்ய முன் கூட்டியே அனுப்பியது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்த நிலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் 2வது போட்டியில் தினேஷ் கார்த்திக் முன்கூட்டியே அனுப்பப்படுவாரா அல்லது வழக்கம் போல தேவையற்ற மாற்றமாக அதிரடியாக நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் உள்ளே கொண்டு வரப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement