ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான ஐந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் 2024 ஐபிஎல், சயீத் முஸ்தாக் அலி கோப்பைகளை கேப்டனாக வென்ற அவர் 2025 சீசனில் பஞ்சாப்பை 14 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று அசத்தினார்.
அதற்கு முன்பாக துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதே ஃபார்மில் 2025 ஐபிஎல் தொடரிலும் பட்டாசாக விளையாடிய அவர் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் குவித்தார். அதனால் இந்திய டி20 அணியில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கே இந்த நிலையா:
ஆனால் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் அடித்து தொடரை சமன் செய்ய உதவிய சுப்மன் கில்லை பிசிசிஐ வருங்கால கேப்டனாக்க விரும்புகிறது. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இத்தனைக்கும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிக்கத் தடுமாறினார்.
அப்படிப்பட்ட அவரை துணைக் கேப்டனாக நியமித்துள்ள தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐயரரை ரிசர்வ் பட்டியலில் கூட எடுக்காததே ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் கழற்றி விடப்பட்டுள்ளது விசித்திரமானது என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இருப்பினும் 2026 டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவார் என்று உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தப்பா நம்பிக்கை:
இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா சுமார் 18 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒருங்கிணைந்த அணியில் இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதற்கு உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது விசித்திரமாக இருக்கிறது”
இதையும் படிங்க: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பிடித்துள்ள 5 பேர் – லிஸ்ட் இதோ
“ஆனால் அவர் விரைவில் இந்திய அணிக்குள் வருவார் என்று மட்டுமே நம்மால் நம்ப முடியும். ஏனெனில் அவர் அதற்கு தகுதியானவர். ஆசிய கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படாததற்கான காரணம் அவரிடம் சொல்லப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல ஏதேனும் முக்கிய பேட்ஸ்மேன் காயமடைந்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



