
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே முதல் 3 இடங்களை பிடித்து தகுதி பெற்று விட்டன. எனவே கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளிடம் போட்டி காணப்படுகிறது.
அதனால் பெங்களூரு நகரில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதில் பெங்களூரு அணி ஆரம்பத்திலேயே 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பின் 5 வெற்றிகளை பெற்று ஃபார்முக்கு வந்துள்ளது.
உத்தப்பா கருத்து:
அதே வேகத்தில் தற்போது சென்னையையும் தோற்கடித்து பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தடுமாற்றமாக விளையாடி வரும் சென்னை வரலாற்றில் இது போன்ற நிறைய அழுத்தமான போட்டிகளில் வெற்றி கண்டு 5 கோப்பைகளை வென்றுள்ளது.
எனவே அழுத்தமான போட்டிகளில் சொதப்பக்கூடிய ஆர்சிபி அணியை தங்களுடைய அனுபவத்தை வைத்து சிஎஸ்கே வீழ்த்தும் என்று சென்னை ரசிகர்கள் நம்புகின்றனர். இதற்கிடையே இந்த வருடத்துடன் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற மாட்டார் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஆர்சிபி அணியின் பார்ட்டியை கலைக்கும் என்று உத்தப்பா கூறியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இது எம்எஸ் தோனியின் கடைசி வருடமாக இருக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? சி.எஸ்.கே பேட்டிங் கோச் – மைக்கல் ஹஸி பேட்டி
“ஆனால் ஆர்சிபி அணியின் பார்ட்டியை சிஎஸ்கே ஸ்பாயில் செய்ய விரும்புவார்களா? என்று கேட்டால் கண்டிப்பாக செய்வார்கள். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் முதல் வருடத்திலேயே இந்த நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற விரும்புவார். அது அவருக்கும் சென்னை அணிக்கும் பெரிய தன்னம்பிக்கையாக இருக்கும். இப்போட்டியில் பெறும் வெற்றி அவருடைய தலைமையிலான சிஎஸ்கே அணியின் நீண்ட கால பயணத்திற்கு நம்பிக்கையை கொடுக்கும். எனவே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.