சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை ஓட விட்டு தொடர் வெற்றிகளைப் பெற்று தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தாலும் அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. இத்தனைக்கும் உலகின் இதர அணிகளை காட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் தரமான வீரர்கள் உலகக் கோப்பைக்கு நிகரான அழுத்தத்தை கொண்ட ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தை சமாளித்து வெற்றி காண முடியாமல் திணறுவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.
சரி சீனியர் வீரர்கள் தான் சொதப்பலாக செயல்படுகிறார்கள் என்று பார்த்தால் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற பெரும்பாலான இளம் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் முதல் முறையாக இந்தியாவுக்கு அடுத்தடுத்த தலைகுனியும் தோல்விகளை பரிசளித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர வீரர்களின் சுமாரான செயல்பாடுகள், முக்கிய வீரர்களின் காயம் போன்றவற்றைத் தாண்டி இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடாததே ஐசிசி தொடர்களில் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
பிசிசிஐக்கு கோரிக்கை:
அதாவது ஐபிஎல் தொடரில் விளையாடும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்றாக தெரிந்து கொண்டு அந்த அனுபவத்தை வைத்து ஐசிசி தொடர்களில் இந்தியாவை வீழ்த்துகின்றனர். அதே போல ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து கொள்வதால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அடித்து நொறுக்கும் வெளிநாட்டவர்கள் தோல்வியை பரிசளிக்கின்றனர்.
ஆனால் இந்திய அணி, ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் தொடர்களின் தனித்துவம் போய்விடும் என்ற எண்ணத்துடன் இந்திய வீரர்களை மட்டும் பிசிசிஐ வெளிநாடுகளில் விளையாட அனுமதிக்காமல் இருந்து வருகிறது. அதன் காரணமாக 1 அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை ஏதேனும் வெளிநாட்டுக்கு சென்று விளையாடும் போது அங்குள்ள சூழ்நிலைகள் தெரியாமல் அதற்கு விரைவாக தங்களை உட்படுத்த முடியாமல் இந்திய வீரர்கள் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைகின்றனர்.
அப்படி வெளிநாடுகளில் இந்திய வீரர்கள் விளையாடாமல் இருப்பதே இருதரப்பு தொடர் முதல் ஐசிசி தொடர் வரை இந்தியாவின் தோல்விகளில் பிரதிபலிப்பாக தெரிவிக்கும் உத்தப்பா இந்த நிலைமை மாற வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த டி20 தொடரில் இந்திய பவுலர்களை நிக்கோலஸ் பூரான் போன்றவர்கள் அடித்து நொறுக்குவதற்கான உதவியை ஐபிஎல் செய்தது என்று நான் கருதுகிறேன். இதுவே ஐசிசி தொடர்களில் இந்தியா தவற விட்ட தந்திரம் என்றும் நான் நினைக்கிறேன்”
“ஏனெனில் உலகில் நடைபெறும் இதர டி20 தொடர்களில் நாம் எங்கேயும் விளையாடுவதில்லை. அவ்வாறு செய்வது ஐபிஎல் பிராண்டையும் தனித்துவத்தையும் காப்பாற்றுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதுவே நமக்கு ஐசிசி அளவிலான தொடர்களில் தோல்வியை கொடுக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் நிறைய சாதகமான அம்சங்களை கற்றுக் கொள்கின்றனர். அதனால் இந்திய பவுலர்களுக்கு எதிராக அவர்கள் இருதரப்பு மற்றும் ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்படுகிறார்கள்”
“ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது 3 – 6 வருடங்கள் வரை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வதால் இந்திய பவுலர்களின் திறமைகளையும் பலவீனங்களையும் வெளிநாட்டவர்கள் எளிதாக தெரிந்து கொள்கிறனர். அதனால் இந்திய பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:2023 உலக கோப்பை : சஞ்சு சாம்சனுக்கு கொடுக்க நினைச்சாலும் இடமில்ல, அந்த இளம் வீரரை செலக்ட் பண்ணுங்க – அஸ்வின் கோரிக்கை
முன்னதாக இந்த கோரிக்கை கடந்த பல வருடங்களாகவே உத்தப்பா போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அதை ஏற்காத பிசிசிஐ அப்படியே அதற்கு நேர்மாறாக காலம் கடந்த ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ராயுடு போன்ற முன்னாள் வீரர்களை வெளிநாட்டில் விளையாடுவதற்கு கூட கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.