இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
டெல்லி அணிக்கெதிரான தோல்வி குறித்து : ரியான் பராக் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது. பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : முதல் 14 ஓவர்கள் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தோம். ஆனால் நான் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு அந்த முமென்ட்டத்தை எங்களால் அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் 220 முதல் 230 ரன்கள் வரை வரும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை சுருட்டி விட்டனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு டெல்லி அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. அதேபோன்று பீல்டிங்கிலும் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டதாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : அங்கேயே எல்லாம் முடிஞ்சது.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்
இதுபோன்ற ஒரு தொடரை வெல்ல வேண்டுமெனில் சிறப்பான செயல்பாடு அவசியம். கடந்த நான்கு ஐந்து போட்டிகளாகவே எங்களது பீல்டிங் சரியான முறையில் இல்லை. இதுபோன்று விளையாடினால் நிச்சயம் டாப் 4-ல் இருக்க முடியாது. இந்த போட்டிக்கு பின்னர் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. அதில் நாங்கள் கவனத்தை செலுத்த இருக்கிறோம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



