
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பாக பந்து வீசிய 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அசத்தியது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 4 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22 ரன்களில் போலண்ட் வேகத்தில் அவுட்டானார்கள்.
அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த விராட் கோலியை மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் 6 ரன்களில் எளிதாக காலி செய்தார். மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில் 13 ரன்களில் வெப்ஸ்டர் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள்.
அதில் ஜடேஜா மெதுவாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ரிஷப் பண்ட் தம்முடைய ஸ்டைலில் ஆஸ்திரேலியா பவுலர்களை அடித்து நொறுக்கினார். குறிப்பாக கடந்த போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் விக்கட்டை பறி கொடுத்ததால் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் என்று விமர்சித்தார். அதனால் முதலில் இன்னிங்ஸில் மெதுவாக விளையாடிய அவர் அதற்கு நேர்மாறாக இம்முறை முதல் பந்திலேயே போலண்ட்க்கு எதிராக சிக்சரை பறக்க விட்டார்.
தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் ஸ்டார்கிற்கு எதிராக அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் 29 பந்தில் 50 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் மிகவும் வேகமாக அரை சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன் மெல்போர்னில் 1895ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஜான் பிரவுன், 1975ஆம் ஆண்டு சிட்னியில் ராய் ப்ரெட்ரிக்ஸ் ஆகியோர் தலா 33 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனை.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது வேகமான அரை சதமடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையையும் ரிஷப் பண்ட் உடைத்தார். இதற்கு முன் 1982இல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் கபில் தேவ் 30 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து மிரட்டலாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 (33) ரன்களை 184.85 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் – விவரம் இதோ
இறுதியில் அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி 4 ரன்னில் அவுட்டானார். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 141-6 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் ஜடேஜா 8*, சுந்தர் 6* ரன்களுடன் உள்ளார்கள். தற்சமயத்தில் 145 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா 250+ ரன்களை போராடி இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.